Abstract:
கனவுகள் பற்றிய விஞ்ஞான அறிவியல் ஆராய்ச்சிகளானவை பல
உளவியலாளர்களால் நடத்தப்பட்டு இருந்தாலும் சிக்மன்ட் பிரைடின் கனவு பற்றிய விளக்கம்
உளவியல் ரீதியில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. “கனவுகளின் விளக்கம்” எனும்
நூலில் குறிப்பிட்டுள்ள கனவுகள் பற்றிய விளக்கங்களை இஸ்லாமிய பார்வையில்
கனவுகளின் விளக்கங்களுடன் ஒப்பிட்டு ஆராயும் வகையில் இவ்வாய்வானது அமைந்தள்ளது.
நனவிலி மனதில் பதிந்துள்ள விடயங்களே கனவுகளாக தோன்றுகின்றன என்ற சிக்மன்ட்
பிரைடின் கருத்தானது இஸ்லாத்தின் கனவுகள் பற்றிய விளக்கத்தின் மூன்றின், ஒரு பகுதியாக
இருப்பதுடன், எதிர்காலத்தை முன்னறிவிப்பு செய்யும் கனவுகள் பற்றியும், கனவுகளுக்கான
குறியீட்டு விளக்கம் தொடர்பான கருத்துக்களும் பொதுவானதாக இருந்தாலும் அவை
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விதமும், அவற்றிற்கான அர்த்தமும் வேறுபட்ட வகையில்
காணப்படுகின்றன. மனிதன் காணும் கனவுகள் அனைத்தும் பகுத்தறிவிற்கு உட்பட்டவையாக
இல்லாமல் இருப்பினும் அவை அர்த்தமுடையவையே என்று பிராய்ட் கூறியுள்ள கருத்தானது
இஸ்லாமிய சமய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக இறைவன் புறமிருந்து
வரும் நல்ல கனவுகள் மாத்திரமே அர்த்தமுடையவை என்று கூறுகின்றது. இவ்வாறு
உளவியலுக்கும் சமயத்திற்குமான அடித்தளங்களில் கனவுகள் பற்றிய கருத்துக்களை
இரண்டாம்நிலை தரவுகளை மையமாகக் கொண்ட இவ்வாய்வில் விளக்கமுறையும், ஒப்பீட்டு
முறையும் பகுப்பாய்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.