Abstract:
செமித்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அரபு மற்றும்
திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் ஆகிய மொழிகளில் காணப்படும் உவமை
அணிகளை இவ்வாய்வு ஒப்பிட்டு ஆராய்கின்றது. உவமை அணி எனப்படுவது, ஒரு
பொருளின் தன்மையை இன்னொரு பொருளுடன் மேற்கோள் காட்டி விளக்குவதும்,
விளக்கப்பட வேண்டிய ஒரு பொருளை நன்கு தெரிந்த ஒரு பொருளுடன் உதாரணங்காட்டிக்
கூறுவதுமாகும். குறித்த இரு மொழிகளிலும் உவமையணி கையாளப்படுகின்ற விதத்தினை
உதாரணங்களுடன் இந்த ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கின்றது. பண்புசார் இலக்கிய
ஆய்வாகக் காணப்படும் இந்த ஆய்வானது, இரண்டாம் நிலைத் தரவு மூலங்களான ஆய்வுக்
கட்டுரைகள், நூல்கள் மற்றும் இணையத்தள ஆக்கங்களின் துணை கொண்டு, அரபு மற்றும்
தமிழ் மொழிகளில் காணப்படும் உவமையணிகளை ஒப்பிட்டு அவற்றுக்கிடையிலான ஒற்றுமை
வேற்றுமைகளைக் கண்டறிந்துள்ளது. இதனூடாக, அரபு மற்றும் தமிழ் மொழிகளில்
காணப்படும் உவமை அணிகளையும் அதனுடன் தொடர்புடைய இலக்கண விதிகளையும்
கண்டறிவதோடு, இத்தலைப்பு பிரதியாக காணப்படும் ஆய்வுப் பற்றாக்குறையையும் நிவர்த்தி
செய்ய இவ்வாய்வு பெரும் பங்களிப்புச் செய்கின்றது. மூல மொழி எண்ணக்கருக்களை
முறையாக அறிந்து கொள்வதன் மூலமே இலக்கு மொழியின் எண்ணக்கருக்களை இலகுவாக
புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், தமிழ் மொழியைத் தாய் மொழியாகக்
கொண்டவர்கள்இ இலக்கு மொழியாக அரபு மொழியைக் கற்குமிடத்தில் இரு
மொழிகளுக்குமிடையில் இலக்கண, இலக்கியங்களில் காணப்படும் கருத்தியல்களையும்,
எண்ணக்கருக்களையும் சரியாக விளங்கிக் கொள்வதன் மூலமே மொழிபெயர்ப்புக் கலையில்
தேர்ச்சி பெறுவதுடன், தரமான மொழிபெயர்ப்புக்களையும், கருத்துக்களையும் சமூகத்துக்கு
அவர்களால் வழங்க முடிகின்றது. அரபு மற்றும் தமிழ் மொழிகளில் உவமையணிக்ககுரிய
உவமை உருபுகளில் ஒத்த தன்மையை அவதானிக்க முடியுமாக இருந்த போதிலும், தமிழ்
மொழியில் பொதுத்தன்மையானது பண்பு, தொழில் மற்றும் பயன் ஆகியவற்றின்
அடிப்படையில் அமையவேண்;டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு மொழிகளிலும்
உவமையணிக்குரிய வகைப்பாடுகளை நோக்குமிடத்து, அரபு மொழியில் பிரதானமாகக்
கருதப்படுகின்ற உவமையணி வகைளை தமிழ் மொழியிலும் கண்டுகொள்ள முடிந்தது.
அவ்வாறே, தமிழ் மொழியில் உவமை அணியானது பல்வேறு நோக்குகளில் அதிகமான
வகைப்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், அரபு மொழியில் உவமை அணிக்குரிய வகைப்பாடுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன என்பதையும் இவ்வாய்வு
கண்டறிந்துள்ளது.