dc.description.abstract |
இன்றைய நவீன உலகில் குறிப்பாக கொவிட் 19 பரவலுக்குப் பின்னரான
காலப்பகுதியில் இணையப் பயன்பாடு அனைவராலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது.
இதிலிருந்து விதிவிலக்கு பெற முடியாத அளவிற்கு மனித வாழ்வோடு ஒன்றித்துப்போன
அம்சமாக இணையப் பாவனை மாறிவிட்டது. இந்தவகையில், பல்கலைக்கழக
மாணவர்களிடத்தில் கொவிட் 19 பரவலுக்குப் பின்னரான காலப்பகுதியில்
சமூகவலைத்தளங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை கண்டறியும் நோக்கில் இவ்வாய்வு
மேற்கொள்ளப்படுகின்றது. பண்புசார் விபரிப்பு ஆய்வு முறையியலைப் பயன்படுத்தி
மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாய்விற்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட முதலாம், இரண்டாம் வருட மாணவர்களில்
220 பேர் எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்டு வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள்
சேகரிக்கப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் எம்.எஸ். எக்ஸல் மூலம் பகுப்பாய்வு
செய்யப்பட்டுள்ளன. சமூகவலைத்தளங்களை மாணவர்கள் பயன்படுத்தும் விதம், அதற்காக
செலவிடும் நேரம், சமூகவலைத்தளங்கள் ஊடாக மாணவர்கள் பெற்ற சாதக விளைவுகள்
மற்றும் பாதக விளைவுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கொவிட் 19
பரவலுக்குப் பின் சமூகவலைத்தளங்களின் பாவனையில் அதிக நேரங்களை செலவழிக்க
வேண்டிய நிர்ப்பந்தம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்தாலும், பாதக விளைவுகளை விட
சாதகமான விளைவுகள் அதிகமாக அடையப்பெற்றுள்ளதை இவ்வாய்வு கண்டறிந்துள்ளது.
குறிப்பாக, இணைய வழிக்கல்வி முறைமை சமூகவலைத்தளங்களின் அதிகரித்த
பாவனையால் கிடைக்கப்பெற்ற வாய்ப்பாக மாணவர்கள் கருதுவதை அடையாளப்படுத்த
முடிகின்றது. கல்வி நடவடிக்கைகள், தொழில்புரிதல், தகவல் அறிதல், சுயகற்றல்,
வேலைவாய்ப்பை தேடுதல், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தல், போட்டி நிகழ்ச்சிகள்
மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளல் போன்ற விடயங்களிலும் சமூகவலைத்தளப்
பாவனை தாக்கம் செலுத்தியுள்ளதை அடையாளப்படுத்தலாம். மறுபுறம், உடல்சார்
பாதிப்புகள், உளப்பாதிப்புகள், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்காமை, இணைய
அடிமைத்தனம், மோசடிகள் போன்ற எதிர்தாக்கங்களையும் மாணவர்கள் எதிர்கொண்டதை
இவ்வாய்வு கண்டறிந்துள்ளது. இந்தவகையில், கொவிட் 19 பரவலுக்கு முன்னர் சமூக
வலைத்தளங்களைப் பயன்படுத்திய போது ஏற்பட்ட தாக்கங்களை விட கொவிட் 19
பரவலுக்குப் பின் ஏற்பட்ட தாக்கங்கள் பல சாதக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது
எனலாம். ஆகவே, கொவிட் 19 பல்கலைக்கழக மாணவர்களை இணையப் பயன்பாட்டின்
அடுத்த கட்ட நகர்வுக்கு இட்டுச்சென்றுள்ளது. |
en_US |