Abstract:
நாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டைப் பொறுத்தவரையில் இயந்திர மயமாக்கப்பட்ட
அவசர உலகில் மனிதனும் ஓர் இயந்திரம் போலவே இயங்கிக் கொண்டிருக்கிறான்.
இக்காலத்தில் அதிகரித்து வருகின்ற விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன தொழில்நுட்ப
சிந்தனைகளின் தாக்கம், நருக்கீடான அவசர வாழ்க்கை, சமூக வலைத்தளங்களின்
ஆதிக்கம், இன, மத முறுகல்கள், தனிநபர், குடும்ப, சமூகப் பிரச்சினைகள் போன்ற
வல்வேறுபட்ட காரணங்களினால் உலக மக்கள் தினம் தினம் உளநெருக்கடிகளையும்
உளப்பிரச்சினைகளையும் சந்திக்கின்றனர். உளவியல் சவால்கள் அதிகரித்த
இக்காலகட்டத்தில் சமூக, தனிநபர் உள ஆரோக்கியத்தினை மேன்படுத்த உளவளத்துணை,
உள ஆற்றுப்படுத்துகை துறை அதிக தேவயுடையதாகக் கருதப்படுகின்றது. உளவளத்துணை
என்பது உளவியலை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாண்மைமிக்க சமூக
அபிவிருத்தித் துறையாகும். நாளாந்த வாழ்வில் மனிதன் முகங்கொடுக்கும் எதிர்பாராத
விடயங்களினால் ஏற்படும் பல்வேறுபட்ட உளப்பிரச்சினைகளை முகங்கொடுக்க இயலுமான
வகையில், மனித ஆளுமையினை விருத்தி செய்வதும், தளம்பல் நிலையிலான
உளநிலையினை நடுநிலைப்படுத்துதலும்;, மற்றும் தேவையான போது உளச்
சிகிச்சையினைப் பெற்றுக்கொடுப்பதும், பிரச்சினைகளை உளவியல் விஞ்ஞான ரீதியில்
அணுகுகின்றதுமான முறைமையினை உளவளத்துணை தன்னகத்தே கொண்டுள்ளது.
குழப்பமான மனநிலையிலிருக்கும் ஒருவரை சாதாரண மன நிலைக்கு கொண்டு
வருவதற்காக வழங்கப்படும் உதவி உளவளத்துணை எனப்படும். உளப் பிரச்சினைகளுக்கு
தீர்வுகாண உதவுகின்ற உளவளத்துணையின் தேவை அதிகரித்ததன் விளைவாக அது
தனித்துறையாகவும் அனைவராலும் வேண்டப்படும் கற்கையாகவும் மாறியுள்ளது.
அதேபோன்று இத்துறையின் தேவை முஸ்லிம்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த அவசர
உலகில் முஸ்லிம்களும் பல்வேறுபட்ட உளப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக்
கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்ட
முறையில் இஸ்லாமிய உளவளத்துணை சேவை வழங்கப்படுகின்றதா? என்ற கேள்வியும்
அதனுடன் சேர்ந்தே எழுந்துள்ளது. அதன் பிரகாரம் தொழில்வான்மையான உளவளத்துணை
முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இஸ்லாமிய அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுவது
வினைத்திறன் மிக்க உளவளத்துணை சேவையினை ஏற்படுத்த துணைபுரியும்.
“தொழில்வான்மையான உளவளத்துணையினை இஸ்லாமிய ஒழுக்க விதிமுறைகளுக்கு ஏற்பவும், இஸ்லாமிய நம்பிக்கை விழுமியங்களிற்கு ஏற்பவும் ஆன்மீககரமாகவும் பிரயோகம்
செய்வதே இஸ்லாமிய அடிப்படையில் உளவளத்துணை வழங்குவதாகவும்” என பேராசிரியர்
ஹ{ஸைன் ரஸ_ல் (2016) குறிப்பிடுகின்றார்.
இன்றைய முஸ்லிம் உளவளத்துணையாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள்
மேற்கத்தேய அல்லது பொது உளவளத்துணையைக் கற்று அதன் அடிப்படையில் மாத்திரம்
முஸ்லிம்களுக்கு சேவை செய்கின்ற போது சில இடங்களில் இஸ்லாமிய கோட்பாடுகள்,
நடைமுறைகள், வரையறைகளைத் தாண்டி பயணிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இந்த
நிலையிலிருந்து முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும் என்பது காலத்தால் உணர்த்தப்பட்ட
உண்மை. அந்த அடிப்படையில் முக்காலத்துக்கும் வழிகாட்டுகின்ற இஸ்லாத்தில் இந்த
உளவளத்துணை தொடர்பான அம்சங்கள் இல்லாமல் இல்லை என்ற வகையில் இஸ்லாம்
வழிகாட்டியிருக்கின்ற கோட்பாடுகள், ஏவல்கள், வழிகாட்டல்கள், அறிவுரைகள்
போன்றவற்றில் புதைந்து மறைந்திருக்கின்ற உளவளத்துணைச் சிகிச்சை முறைகளை
வெளிக்கொணர்ந்து முஸ்லிம் சேவை நாடிகளுக்கும் முஸ்லிம்
உளவளத்துணையாளர்களுக்கும் பாரிய பங்களிப்பினை செய்ய வேண்டும். அந்தவகையில்
இஸ்லாமிய வழிகாட்டல்களில் உபயோகிக்கப்பட்டுள்ள உளவளத்துணைச் சிகிச்சை
முறைகள் இந்த ஆய்வில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்வு இஸ்லாமிய
வழிகாட்டல்களில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் உளவளத்துணைச் சிகிச்சை முறைகளைத்
தெளிவுபடுத்துதல், முஸ்லிம் உளவளத்துணையாளர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான
உளவளத்துணைச் சிகிச்சை முறைகளின் மூலம் உளவளத்துணை சேவையை
வழங்குவதற்கு வழிகாட்டல் ஆகிய நேக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றது. இது
பண்புரீதியான ஆய்வாகும். இவ் ஆய்வில் முதலாம் நிலைத் தரவுகளாக மூல நூல்களான
அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ் கிரந்தங்கள் என்பன பயன்யடுத்தப்பட்டுள்ள அதேவேளை
இரண்டாம் நிலைத் தரவுகளாக இது தொடர்பான நூல்கள், ஏற்கனவே வெளியிடப்பட்ட
ஆய்வுகளின் உட்பரிமானங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையதளம் என்பன
மீழாய்வுக்குட்படுத்தப்பட்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.