Abstract:
பிராந்திய அடிப்படையில் இலக்கியங்களை ஆய்வு செய்வதும் மதிப்பீடு
செய்வதும் அண்மைக்கால இலக்கியப் போக்கில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி
கண்டுள்ளது. அந்தவகையில் தென்னிலங்கைப் பிராந்தியமானது தன்னகத்தே தனித்தவமான
கலை, கலாசாரப் பாரம்பரியங்களைக் கொண்டு காணப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.
ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய முஸ்லிம்கள் அரபு
வர்த்தகர்களின் சந்ததியினராகவும் தமிழகத்து முஸ்லிம்களின் தொடர்புடையவர்களாகவும்
இருந்துள்ளனர். பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கிடையில் மிகச்சிறுபான்மையாக
வாழக்கூடிய தென்னிலங்கை முஸ்லிம்களின் பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும்
தமிழே காணப்படுகின்றது. இதனால் இவர்களது இலக்கிய முயற்சிகளும் தமிழ்
மொழியிலேயே அமையப் பெற்றுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதி வரை
தென்னிலங்கை முஸ்லிம்களின் இலக்கிய முயற்சிகள் சமய உள்ளடக்கங்களை
மையப்படுத்தியாகவே அமைந்தன. இவை பெரும்பாலும் ஸீப்ஹீ, மஃரிப் தொழுகைகளின்
பின்னரும் ஏனைய வைபவங்களிலும் ‘ஹழறா மஜ்லிஸ்’களிலும் இடம்பெற்ற புகழ்
மாலைகளாகும். அக்காலப்பகுதியில் இத்தகைய பக்தி நெறி சார்ந்த படைப்புக்களே
அச்சமுதாய மக்களிடம் அதிகளவான வரவேற்புப் பெற்றிருந்தன. இவ்வகையில்
தென்னிலங்;கை முஸ்லிம்களின் மதச்சார்பான இலக்கிய முயற்சிகளை கண்டறிதலை ஆய்வு
நோக்கமாகக் கொண்ட இவ்வாய்வில் முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத்
தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விளக்க முறை மற்றும் விபரண ஆய்வு
முறையியல் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.