Abstract:
இஸ்லாமிய கலைகள், நாகரீகம் மற்றும் பண்பாடு அனைத்தும்
ஊற்றெடுக்கும் மத்தியஸ்தலமாக புனித பள்ளிவாசலையே முஸ்லிம்கள் மதிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமது தேவைக்கான அளவு, அமைப்பில் வேறுபட்டதாகவும்
பிறநாகரீகங்களில் இருந்து பெற்றுக் கொண்ட பண்பாடுகளின் அடிப்படையிலும் கவர்ச்சியான
பள்ளிவாசல்கள், மாளிகைள் என இஸ்லாமியக் கட்டிடக்கலை தனியான மரபுகளுடன்
வளர்ச்சி கண்டு வந்தது. இலங்கையில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை
பிரதேசமானது பெரும்பான்மை முஸ்லிம்களுள் வாழுகின்ற ஒரு பிரதேசமாகும். இங்கு
காணப்படும் பாரம்பரிய இஸ்லாமியக் கட்டிடங்கள் அனைத்தும் அவை தொடர்பான
தகவல்கள் மற்றும் அவற்றின் அழகியல் வெளிப்பாடுகள் போன்ற ஆவணங்கள்
இன்மையினால் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் பிரதான நோக்கமாக
சம்மாந்துறையின் முஸ்லிம் பிரதேசத்தில் வெளிப்படுத்தப்படும் கட்டிடங்களான
பள்ளிவாயல்கள், சியாரக்கட்டிட அமைப்புக்களில் இஸ்லாமிய கட்டடிடக்கலை மரபுகள்
எவ்வாறு தாக்கம் செலுத்தியிருக்கின்றன என்பதை அறிவதடன் அவற்றில் எவ்வாறான
இஸ்லாமிய கட்டிடக்கலை மரபுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அக்கட்டிடங்களில்
எவ்வாறான அழகியற்கலை வெளிப்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பன தொடர்பிலும்
ஆராய்வது இவ்வாய்வின் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. ஆய்வு முறையியலில்
ஆய்வினை திறன்பட செய்து முடிக்க ஆய்வுடன் தொடர்புடைய தரவுகள்
இன்றியமையாததாகும். இவ்வாய்வினை சீராக செய்வதற்கு முதலாம் நிலைத் தரவுகள்
மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். முதலாம்
நிலைத்தரவுகளாக நேரடி அவதானிப்பு, நேர்காணல் முறைகள் மூலமாக தரவுகள்
பெறப்பட்டுள்ளன. இப்பிரதேசம் தொடர்பாக நன்கு அனுபவமுடையவர்கள் சிலருடனும்
நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. நேர்காணல் -05 பேர் இரண்டாம் நிலைத் தரவுகளாக
நூல்கள்,இணையத்தளங்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் போன்றன
பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட பண்பு ரீதியான தரவுகள் விபரணமுறையினூடாக
அல்லது கருத்தாக்க முறையினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன.
ஓவியக்கலை, கட்டடிடக்கலை உட்பட ஏனைய நுண்கலைகளிலும் ஒரு முஸ்லிம் தனது
ஆற்றலை வெளிப்படுத்துகின்றான் என்பதை இவ்வாய்வு முன்வைத்துள்ளது. இஸ்லாம்
வளர்த்த கலைகளில் பள்ளிவாயல் கட்டிடக்கலைகளும் சியாரங்களின் கட்டிடக்கலையும குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயங்களாகும். மேலும் இஸ்லாமியக்கட்டிடக்கலை மரபினை
வெளிப்படுத்தும் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பதும் அவற்றினை பேணி நல்லமுறையில்
வைத்திருப்பதும் எமது தலையாய கடமையாகும். ஆனால் இன்று சியாரங்கள் தொடர்பாக
மக்கள் மத்தியில் காணப்படுகின்ற தவறான எண்ணங்களினால் இவை அழிக்கப்பட்டும்
வருகின்றன. மேலும் இவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றமையினால் முஸ்லிம்களின் வரலாறுஇ
பாரம்பரியம் என்பன இல்லாமல் ஆக்கப்பட்டு வருகின்றன. இவற்றினை பாதுகாத்து
ஆவணப்படுத்தி வைப்பதன் மூலம் எதிர் வரும் சந்ததியினருக்கம் தெளிவூட்டலாம்;. இவற்றை
விதந்துரைகளாக குறிப்பிடலாம்.