Abstract:
மனிதனை அடையாளப்படுத்திக் காட்டும் முக்கிய விடயங்களில் ஒன்றாக மொழி
காணப்படுகின்றது. அந்தவகையில் உலகின் சர்வதேச மொழியாக ஆங்கிலம்
காணப்படுகின்றது. உலகில் பல நாடுகளில் இம் மொழியானது கல்வியல் ரீதியில் பாரிய
செல்வாக்குப் பெற்றுக் காணப்படுகின்றது. இலங்கையிலும் ஆங்கில மொழியானது இரண்டாம்
மொழியாக பார்க்கப்படும் அதே வேளை கல்வி மற்றும் நிர்வாக சேவையில் இது பாரிய
செல்வாக்கு பெற்றுள்ளது. பாடசாலை ரீதியல் ஒரு பாடவிதானமாக காணப்படுகின்றது.
எனினும் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் சமூக, பொருளாதார மற்றும்
பாடசாலை சூழல் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன. எனவே இவ் ஆய்வானது
ஆங்கிலக் கல்வி கற்பதில் மாணவர்கள் எதிர் நோக்கும் சவால்களை கண்டறிந்து
மாணவர்களின் ஆங்கிலக் கல்வி அடைவு மட்டம் உயர்வதற்கும் பாடசாலை
அபிவிருத்திக்கும் வழிகோருகின்றது. தோட்டப்பகுதியில் அமைந்துள்ள கெ.தெஹி பனாவத்த
தமிழ் வித்தியாலயத்தில் 6-9 தர மாணவர்களில் 50 பேருக்கு அளவியல் வினாக் கொத்து
வழங்கப்பட்டதுடன் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர் குழாம் ஆகியோருடன்
மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் மூலமாகவும் முதலாம் நிலைத் தரவூகள் மற்றும்
இரண்டாம் நிலைத் தரவுகள் பெறப்பட்டு விபரண முறைகளின் அடிப்படையில்
இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதியாக, பெற்றௌர்களின் ஆர்வமின்மை
மாணவர்கள் கற்றலின் ஆர்வமின்மை, பொருளாதார பிரச்சினை, பாடசாலை நிர்வாக
ஒழுங்கின்மை, கற்றல் கற்பித்தல் குறைபாடு, பகுதி நேர வகுப்புக்களில் சமூக உதவிகள்
கிடைக்காமை, ஆங்கிலக் கல்வியை நகரப் புறங்களுக்கு சென்று கற்பது கடினம்,
பிரயாணச் செலவு, கல்வி கற்பதற்கான சூழலின்மை, பெற்ரோர் கல்வி அறிவு போதாமை
போன்ற விடயங்கள் தோட்டப் பாடசாலை மாணவர்கள் ஆங்கில மொழியை கற்பதில்
மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இவற்றை நிறைவு
செய்யும் முகமாக அமைச்சு வளமான ஆசிரியர்ளை இப்பகுதி பாடசாலைகளுக்கு
வழங்குவதுடன் ஏனைய பகுதிகளைப் போன்று இப்பாடசாலைகளிலும் குறைகளை நிவர்த்தி
செய்யவேண்டும். பெற்றௌர்களுக்கு ஆங்கிலக் கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்
கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு விழிப்புணர்வு நடாத்துதல், ஆங்கிலக் கல்வியின்
முக்கியத்துவத்தை எடுத்துக் கூறல், சமூக நிதி உதவிகளை ஏழை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்தல், பாடசாலை நிர்வாகத்தை மறுசீரமைப்புக்கு உட்படுத்தல் போன்றவற்றோடு
மேலும் சில விடயங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.