Abstract:
மீளவலியுறுத்தலானது மாணவர்கள் வினைத்திறனாக கற்றல்
செயற்பாடுகளில் ஈடுபட தூண்டுதலாக அமைகிறது. இன்று ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு
தகுந்த மீளவலியுறுத்தல்கள் வழங்கப்படாமையினால் கற்றலில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை
எதிர்கொள்கின்றனர். இவ்வாறு குடும்பத்தினைப்பிரிந்து பாடசாலைக்கு முதன்முதலாக
பாடசாலைச் சமூகத்துடன் இணையும் மாணவர்களின் கற்றல் விருத்தியில் பாடசாலையும்
ஆசிரியர்களும் எந்தளவு பங்களிப்பினை வங்குகின்றனர் என்பதனையும் அதனுடன் இணைந்து
பெற்றோர்களின் பங்களிப்பு மற்றும் பின்னதங்கிய மாணவர்களை தொடர்ந்தும் அதே
நிலையிலிருந்து மாற்றமடையச் செய்வதற்கும் கனிஸ்ட இடைநிலை வகுப்புகளில்
தொடர்ந்தும் மாணவர்களை கற்றலின்பால் வழிகாட்டுவதிலும் மீளவலியுறுத்தலின்
செல்வாக்கு ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு எந்தளவு செல்வாக்குச் செலுத்துகின்றது
என்பதனைக் கண்டறியும் முகமாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கான
ஆய்வுப்பிரதேசமாக திருகோணமலை கல்வி வலயத்தின் குச்சவெளி கோட்டத்திலுள்ள 5
பாடசாலைகள் இலகு எழுமாற்று மற்றும் வசதி மாதிரியெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு
இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. தரம் 3 தொடக்கம் தரம் 5 வரை கல்வி பயிலும் ஆரம்ப
பிரிவு மாணவர்கள் 100 பேரும், ஆசிரியர்கள் 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில் 20
பேரும், 5 அதிபர்களும் மொத்தமாக 125 பேர் ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே ஆய்வின் சிறப்பு நோக்கங்களை அடைந்து கொள்ளும் வகையில் ஆய்வு வினாக்கள்
தயாரிக்கப்பட்டு ஆய்வுக் கருவிகள் உருவாக்கப்பட்டன. வினாக்கொத்தானது வெவ்வேறாகத்
தயாரிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அதிபர்களுக்கு
நேர்காணல் படிவம் வழங்கப்பட்டது. இவ்வாய்வுக் கருவிகளின் மூலம் நம்பகமும் தகுதியுமான
முடிவுகள் பெறப்பட்டன. இவ்வாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில்
பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வினைத்திறனான கற்றல் விருத்தியில்
மீளவலியுறுத்தலின் செல்வாக்கு குறைவாகவே காணப்படுகின்றமையை கண்டறிய முடிந்தது.
இதற்கு அதிகளவான மாணவர்களின் எண்ணிக்கை ,வளங்களின் பற்றாக்குறை, பெற்றோரின்
கவனயீனம், பாடசாலை செயற்பாடுகளின் திருப்தியின்மை முக்கிய காரணங்களாக
அமைகின்றன. எனவே மீளவலியுறுத்தல் மூலம் ஆரம்ப பிரிவு மாணவரிடையே
வினைத்திறனான கற்றலை அதிகரிப்பதற்காக மாணவர்களுக்கு பாராட்டு, பரிசில்களை
வழங்கல், வருடாந்த போட்டி நிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு விழாக்களை நடாத்தல்,
மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள், பரிகாரக்கற்பித்தலை மேற்கொள்ளல்,
இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகள் போன்ற
பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை பாடசாலை மட்டத்தில் ஒழுங்கமைப்பதோடு அவற்றிற்கு ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்கள் செயற்படல் போன்ற விதப்புரைகள்
முன்வைக்கப்பட்டன.