Abstract:
இயந்திரமயமாகியுள்ள இந்த உலகில் பணம் சம்பாதிப்பதையே
வாழ்க்கையாக நினைத்து பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் தனது
ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொள்வதில்லை. நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வமாகும். பணத்தை உழைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆரோக்கியம்
என்பது விலைமதிப்பிட முடியாத செல்வம். அப்படிப்பட்ட ஆரோக்கியம் கெட்டுப் போவதற்கு
முக்கிய காரணங்களில் ஒன்று மனிதனின் உணவுப் பழக்கவழக்கமாகும். இன்று மனிதனின்
வேலைகளில் அநேகமானவை இயந்திரங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. இதனால்
மனித வாழ்க்கை இயந்திரமயமாக மாற்றப்பட்டுவிட்டது. அன்றாட உணவுப்
பழக்கவழக்கங்களிலும் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சிறுவர் முதல்
பெரியோர் வரை ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடம் துரித உணவுப் பழக்கம் அதிகரித்துக்
கொண்டு வருகிறது. மாணவர்களிடத்தில் அதிகரித்து வரும் இத் துரித உணவுப்பழக்கமானது
அவர்களின் கற்றல் செயற்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களைக் கண்டறிவதை
நோக்காகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கான ஆய்வுப்
பிரதேசமாக மேல் மாகாணத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் 04 தெரிவு செய்யப்பட்டு
இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. நோக்க மாதிரியைக் கொண்டு ஆரம்ப, இடைநிலைப் பிரிவு
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்விற்காக
நேர்முகங்காணல், வினாக்கொத்து மற்றும் அவதானம் ஆகிய ஆய்வுக் கருவிகள்
பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்வுக் கருவிகள் மூலம் நம்பகமும் தகுதியும் வாய்ந்த தரவுகள்
பெறப்பட்டன. ஆய்வு முடிவுகளிலிருந்து, அதிகமான மாணவர்கள் துரித உணவுப்
பழக்கவழக்கம் காரணமாக இளம் வயதிலேயே தமது உடல் ஆரோக்கியத்தை இழந்து
வருகின்றனர். ஆரோக்கியமற்ற உடல் ஆரோக்கியமற்ற கற்றலுக்கு வழிவகுக்கும் என்ற
ரீதியில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மாணவர்களின் ஆரோக்கியமற்ற உணவுப்
பழக்கவழக்கம் பெருமளவில் பாதித்துள்ளமையும் கண்டறியப்பட்டன. இதனால் பாதிப்படையும்
கற்றலையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பல்வேறுபட்ட விதப்புரைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன.