Abstract:
நாணயமாற்று முறையானது இன்று பரவலாக எல்லோராலும்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது குறித்த ஒரு நாணயமானது விற்பனைக்கு ஒரு
விலைக்கும் கொள்வனவிற்கு ஒரு விலைக்கும் பரிமாறப்படுவதனை பரவலாக காணலாம்.
இந்த முறைமையின் அடிப்படையில் பணமானது ஒரு வியாபாரப் பொருளாக
கையாளப்படுவதை நாம் அவதானிக்கின்றோம். அதனை கொள்வனவு மற்றும் விற்பனை
செய்யும்போது அதன் மூலம் இலாபமீட்டும் செயற்பாடு இங்கு நடைபெறுகின்றது. இவ்வாறு
பயன்படுத்துவது இஸ்லாமிய அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டதா அல்லது தடுக்கப்பட்டதா
என்பதை வெளிக்கொண்டு வருவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இதனடிப்படையில்
தற்கால நாணயமாற்று நடைமுறை சம்பந்தமான விடயங்களை உரிய வங்கி, நாணயமாற்று
நிலையங்களின் முகாமையாளர்களை நேர்காணல் செய்ததன் மூலம் முதல்நிலை தரவுகள்
பெறப்பட்டதுடன், இது சம்பந்தமான இஸ்லாமிய அடிப்படை ஆதாரங்கள் இரண்டாம்நிலை
தரவுகளாக இஸ்லாமிய பிக்ஹு துறை நூல்கள், உஹுல் நூல்கள், ஹதீஸ் கிரந்தங்கள்
மற்றும் குர்ஆன் வசனங்களில் இருந்து திரட்டப்பட்டு அவை விவரணம் செய்யப்பட்டு
பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்காலத்தில்
நடைமுறையில் உள்ள நாணய மாற்று முறைமை அதில் காணப்படும் வட்டி (ரிபா-அல்பள்ல்)
காரணத்தால் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முரணானதாகும். எனவே குறித்த
நாணயங்களுக்கு இடையிலான பரிமாற்று வீதத்தை நிலையான ஒரு பெறுமானமாக
குறிப்பிட்டு விற்பனை மற்றும் கொள்வனவின் போதும் ஒரே பெறுமதியை அடிப்படையாகக்
கொண்டு இந்தப் பரிமாற்றம் இடம் பெறுவதன் மூலம் இஸ்லாமிய வரையறைகளின்
அடிப்படையில் ஆகுமானதாக அமைக்க முடிவதோடு, சேவைக் கட்டண அடிப்படையில் ஒரு
பெறுமதியை நிர்ணயம் செய்வதன் மூலம் குறித்த நிறுவனங்கள் தமது இலாபத்தை ஈட்ட
முடியும் என்பதனையும் நாம் இந்த ஆய்விலிருந்து முன்வைக்கின்றோம்.