Abstract:
தற்பாதுகாப்பு உரிமையானது எந்தவொரு சட்டவிரோத தாக்குதலையும் எதிர்ப்பதற்கு
ஒருவரை சட்டபூர்வமாக அனுமதிக்கிறது. பண்புரீதியான இவ்வாய்வானது இலங்கை
குற்றவியல் சட்டத்தில் குறியிடப்பட்டுள்ள தற்பாதுகாப்பு உரிமைகள் குறித்தும் இஸ்லாமிய
நீதித்துறையின் அடிப்படையில் தற்பாதுகாப்புரிமைகள் குறித்தும் ஒப்பீட்டு ஆராய
விளைகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளை மையப்படுத்திய
இவ்வாய்வானது விபரிப்பு, ஒப்பிட்டு ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி
மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பாதுகாப்பு என்ற கோட்பாட்டின் கீழ் ஒரு ஆக்கிரமிப்பாளருக்கு
எதிரான வன்முறைச் செயலை நியாயப்படுத்த ஒரு பிரதிவாதிக்கு இலங்கையின் தண்டனைச்
சட்டம் உரிமையை வழங்குவதைப் போலவே இஸ்லாமிய சட்டமும் பல நூற்றாண்டுகளுக்கு
முன்னரே இவ்வுரிமையை வழங்கியிருக்கின்றது. இவ்விருசட்டங்களிலும் உள்ள
பெரும்பாலான தற்பாதுகாப்பு விதிகள் ஒத்ததன்மையில் காணப்படுவதோடு இஸ்லாமிய
தெய்வீக ஆணை வழியே தற்காப்பு விதிகளை பேணுவதில் இலங்கை குற்றவியல் சட்டங்கள்
வேறுபட்டமைகின்றன. தனிநபர் பாதுகாப்புரிமை தொடக்கம் சமூகத்தின் கூட்டு
தார்மீகத்தரங்களையும் மதிப்புகளையும் பாதுகாப்பதை இஸ்லாமிய நீதித்துறை
வலியுறுத்துவதை தரவுப்பகுப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது. இப்பாதுகாப்புரிமையானது குறித்த
சூழ்நிலைகள், குற்றம் மற்றும் குற்ற நடவடிக்கையின் நியாயத்தன்மை ஆகியவற்றைப்
பொறுத்து மாறுபடலாம். பாதுகாவலர், எதிராளியின் தாக்குதலை சான்றுகள் மூலம் நிரூபிக்க
வேண்டிய கடப்பாட்டிலுள்ளார். வரம்பு மீறுதல், கடத்தல், சேதம் விளைவித்தல்,
சொத்துக்களை அழித்தல், கொள்ளை மற்றும் திருட்டு ஆகியன சொத்துக்கள் மீதான
குற்றங்களாகவும் உடலுக்கு தீங்கு விளைவித்தல், கற்பழிப்பு, இயற்கைக்கு மாற்றமான காம
வெளிப்படுத்தல், ஆட்கடத்தல், சட்ட விரோத தடுப்பு, வன்குறும்பு, கொலை ஆகியன உடல்
சார்ந்த குற்றங்களாகவும் கருதப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் ஷரீஆ
அறிவித்ததைவிட தற்போதைய இலங்கை குற்றவியல் சட்டத்தில் தற்பாதுகாப்புரிமை
தொடர்பில் முன்மொழியப்பட்ட புதிய மாற்றங்கள் இல்லை என்பதையும் இவ்வாய்வு முடிவுகள்
பிரஸ்தாபிக்கின்றன. குற்றவியல் சட்ட பயிற்சியாளர்களுக்கும் இஸ்லாமிய சட்டத்துறை
பயிலும் மாணவர்களும் சட்டத்துறைசார் ஆய்வாளர்களுக்கும் இவ்வாய்வானது
பயனுடையதாக அமைவதோடு மக்களிடையே தற்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினையும்
ஏற்படுத்தவல்லது.