Abstract:
இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழியையும் இஸ்லாமிய இலக்கியங்களையும்
வளர்த்தெடுப்பதில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளனர். முஸ்லிம்கள் அறபு
மொழியில் அமைந்துள்ள தமது சமய இலக்கியங்களை தாய்மொழியான தமிழுக்கு
மொழிபெயர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினர். அந்த வகையில், காத்தாங்குடியைச்
சேர்ந்த கவிஞரும் இஸ்லாமிய அறிஞருமான மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி
அவர்கள் ‘புஹாரீயின் பொன்மலர்கள்’ எனும் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுதி முக்கிய
ஒன்றாகும். ஹதீஸ்களை கவிதை நடையில் மொழிபெயர்க்கும் போது மொழியியல்,
கவித்துவம் மற்றும் சமயம் சார்ந்த பிரச்சினைகள் எழுகின்றன. எனவே இவ்வாய்வு, ஹதீஸ்
இலக்கியத்தை மொழிபெயர்ப்புச் செய்வதில் மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளும்
பிரச்சினைகளை கண்டறிந்து, அதனைத் தீர்ப்பதையும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான
மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹியின் இலக்கியச் செயற்பாடுகளை அறிமுகம் செய்து
அவரது “புஹாரீயின் பொன்மலர்கள்” மூலம் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற
முனைதலையும் இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக விவரண மற்றும் பகுப்பாய்வியல்
முறைகள் பயன்படுத்தப்பட்டன. ஸஹீஹுல் புஹாரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 500
ஹதீஸ்களை கவிதை வடிவில் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள கவிஞர் தம் மொழிபெயர்ப்புச்
செயற்பாட்டில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல், தழுவல், சுருக்கம் போன்ற
மொழிபெயர்ப்பு உத்திகளைக் கையாண்டுள்ளார். அதேவேளை, அவர் தனது
மொழிபெயர்ப்பு பணியில் நேர்த்தியாகவும், ஹதீஸ்களின் கருத்துக்கள் கெடாமலும்,
கவித்துவத்தன்மை குன்றாமலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளமை இவ்வாய்வுக் கூடாக
கண்டறியப்பட்டுள்ளது.