Abstract:
மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களில் மலையக மக்களை மிகவும் பாதித்த சட்டங்களாக பிரஜாவுரிமை தொடர்பான குடியுரிமைச் சட்டம் (1948), ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964), ஸ்ரீமா - இந்திரா ஒப்பந்தம் (1974) முதலியன விளங்குகின்றன. இச்சட்டங்களால் மக்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதனை மலையக இலக்கியங்கள் பல்வேறு விதமாகச் சித்தரிக்கின்றன. மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பிரஜாவுரிமைப் பிரச்சினையாலும் அதன் முலம் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதனாலும் அனுபவித்த பிரச்சினைகளை மலையகக் கவிதைகள் எந்தளவுக்குச் சித்தரித்துக் காட்டுகின்றன என்பதனை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் முதலாம், இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை, இந்தியாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் மலையகக் கவிதைகள் சிறப்பாகச் சித்தரித்துள்ளன என்பதே இவ்வாய்வின் முடிவாகும்.