Abstract:
மனித வாழ்விற்கு ஒழுக்கம் அவசியமானதொன்றாக காணப்படுகின்றது. இதிலுள்ள ஒழுக்கக்
கோட்பாடுகள் மனித வாழ்வின் போக்கை தீர்மானிக்க வழியமைக்கின்றது. குறிப்பாக,
ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் நம்பிக்கைக் கோட்பாடு, இலட்சிய நோக்கு, வாழ்வியல்
என்பவற்றிற்கேற்ப இது வித்தியாசமாக அமையும். இந்தவகையில், மனிதன் மற்றும் ஒழுக்கம்
பற்றிய வரையறையில் மேற்கினதும் இஸ்லாத்தினதும் கருத்துக்களைக் கண்டறியும்
நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது ஒப்பீட்டாய்வு
முறையியலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தி
இவ்வாய்வு அமைவதால், தரவுகளைப் பெற ஒழுக்கவியல் தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள்,
ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், இணையக் கட்டுரைகள் ஆகியன
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் கண்டறிதல்களாக மேற்கினது ஒழுக்கவியல்
கோட்பாடுகள் மனிதனால் மனித பகுத்தறிவாலும் சிந்தனையாலும் தோற்றுவிக்கப்பட்டதால்
எந்தவொரு ஒழுக்கவியல் கோட்பாடும் வாழ்வியல் ரீதியான கோட்பாடாக செயற்பட்டு முழு
மனித சமூகத்திற்கும் பொருத்தமானதொரு கோட்பாடாக உருவாகவில்லை. இதிலிருந்து
இஸ்லாமிய கோட்பாடுகள் விதிவிலக்குப் பெறுகின்றது. ஏனெனில், இஸ்லாமிய ஒழுக்கங்கள்
மனிதனை சிருஷ்டித்த படைப்பாளனிடமிருந்து வழங்கப்பட்டவைகளாக உள்ளன என்பதே
இன்றுவரை இஸ்லாமிய ஒழுக்கவியல் நிலைத்திருக்க காரணமாக அமைகின்றது. ஏனெனில்,
மனிதனது நடத்தைகளும், இயக்கங்களும், தொழிற்பாடுகளும் சிக்கலானவையாக
இருப்பதால் அவற்றை முறையான கட்டுப்பாட்டுக்குள் அமைத்து நெறிப்படுத்த மார்க்கம்,
ஒழுக்கம், சட்டம் ஆகிய மூன்று இணைந்து தொழிற்பட வேண்டும். இம்மூன்றில் ஒன்றையோ
அல்லது இரண்டையோ செயற்படுத்தினால் கூட அவ்வொழுக்கவியல் வெற்றி பெற
முடியாது என்பது நிதர்சனமாகும்.