Abstract:
பெண்கள் விடுதலை, பால்நிலை சமத்துவம், பெண் உரிமைகள் மற்றும் முன்னேற்றம் பற்றிய கருத்தியலும் இயக்கமும் பெண்ணியம் உருவாக்கத்துக்கு வழிசெய்துள்ளது. பெண்ணியம் வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட வேறுபட்ட பரிமானங்களை அடிப்படையிலான அடையாளப் போக்குகளையும் (tendencies) அது பெற்றுள்ளது. இஸ்லாமியப் பெண்ணியம் எனும் எண்ணக்கரு அவற்றுள் குறிப்பிடத்தக்கது. பெண்ணியம் மற்றும் இஸ்லாமியப் பெண்ணியம் தொடர்பான இலக்கியங்களை, எழுத்துக்களை மீளாய்வுக்கு உட்படுத்தி, பாரம்பரிய, மதச்சார்பின்மை பெண்ணியத்திலிருந்து இஸ்லாமியப் பெண்ணியத்தை வேறுபடுத்தி, வரைவிலக்கணப்படுத்தும் முனைவுகளை இக்கட்டுரை பகுப்பாய்கின்றது. பொது பெண்ணிய சிந்தனையின் தாக்குறவுக்கு உட்பட்டு, மத்திய கிழக்கின் பிரத்தியோகமான சூழலமைவில் இஸ்லாமியப்பெண்ணியம் தோற்றம்பெற்றது. எனவே அதன் பதப்பிரயோகத்தில் இஸ்லாமியம் ஒரு குறியீட்டு அடையாளமாகவே (labeling) பெரிதும் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமியப் பெண்ணியத்தின் வரையறைகள், அடிப்படைகள் பற்றிய கருத்தாக்கமும் வாதங்களும் அறுதிசெய்யப்படாமல் தொடர்கின்றன. இருந்தபோதிலும் பெண் விடுதலை, முன்னேற்றம் பற்றிய பெண்ணிய சிந்தனையை இஸ்லாம் அதன் மூல ஆவணமான அல்-குர்ஆன் பாற்பட்ட உரையாடலாக கட்டமைக்க விழைகிறது இஸ்லாமியப் பெண்ணியம். ஆயினும் மதச்சார்பின்மை பெண்ணியவாதிகள், விசுவாச பெண்ண்ணியக்கவாதிகள், பாரம்பாிய இஸ்லாமியவாதிகள் என பல்வேறு தரப்பினர் இஸ்லாமிய பெண்ணியம் எனும் எண்ணக்கருவின் ஏற்புநிலை மீது காத்திரமான விமர்சனங்களை தொடுத்துள்ளனர். பெண்கள் பற்றிய விவகாரங்கள் ஆய்வாளர்களின் கவனத்தை பெரிதும் ஈரத்துள்ள இன்றைய சூழலில் இக்கட்டுரை பெண்கள் பற்றிய கல்வி சார் உரையாடலை மேலும் வளப்படுத்தவலல்லது.