Abstract:
உரோம, கிரேக்க பேரரசுகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அங்கிருந்த அறிவுப் பொக்கிஷங்களைப்
பெற்றவர்கள் முஸ்லிம்கள் என்பது வரலாற்றியல் சான்றாக உள்ளது. முஸ்லிம்கள்
அவர்களிடமிருந்து அறிவை பெற்றுக் கொண்டார்கள் என்பதை விட அதனைப் பாதுகாத்து
அடுத்த பரம்பரையினருக்கு கொண்டுசெல்ல அரும்பாடுபட்டார்கள் எனக்கூறுவது
பொருத்தமாகும். இந்தவகையில், மருத்துவத்துறை, வானியற்துறை, புவியற்துறை, கணிதத்துறை
ஆகிய துறைகளுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பினை அடையாளப்படுத்துவது
இவ்வாய்வின் நோக்கமாக காணப்படுகின்றது. இவ்வாய்வானது இரண்டாம் நிலைத் தரவுகளைப்
பயன்படுத்தி பண்பு ரீதியில் விபரிப்பு ஆய்வு முறையியலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக
மத்திய காலம் மற்றும் அக்காலத்தில் வளர்ச்சி பெற்ற இயற்கை விஞ்ஞானங்கள் தொடர்பாக
எழுதப்பட்ட நூல்கள், ஆய்வுகள், கட்டுரைகள், இணைய ஆக்கங்கள் மூலம் தரவுகள் பெறப்பட்டு
பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. தற்கால விஞ்ஞானத்துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்கள்
மத்திய காலத்தைச் சேர்ந்த முஸ்லிம் அறிஞர்கள் என்பது வரலாறு சொல்லுகின்ற விடயமாகும்.
முஸ்லிம்கள் தங்களுக்கு முன்பு வாழ்ந்த சமூகத்தினரான கிரேக்கரிடமிருந்து பெற்றுக்கொண்ட
அறிவை அப்படியே பயன்படுத்தாமல், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விமர்சித்தும்,
தவறானதை நீக்கியும், புதியன புனைந்துமே தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர். இதற்கு
உந்துசக்தியாக அல்குர்ஆனின் போதனைகளும், நபி (ஸல்) அவர்களின் ஆர்வமூட்டல்களும்
காணப்பட்டன. இதனடியாக வளர்ச்சிக் கட்டத்தில் இருந்த விஞ்ஞானத்துறைகள் மத்திய
காலத்தில் எழுச்சிக் கட்டத்திற்கு நகர்ந்தது. இதனால் புதிய அறிவுகளை பெற்ற முஸ்லிம்கள்
அதனை பிற சமூகத்தவருக்கும் வழங்குவதில் பாகுபாடு காட்டவில்லை. இதனடியாக, தற்கால
விஞ்ஞானத்துறைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தவர்களாக மத்திய கால முஸ்லிம்கள்
காணப்படுகின்றனர் என்பது மறுக்க, மறைக்க முடியாத உண்மையாகும்.