Abstract:
இஸ்லாம் கொண்டுள்ள சட்டங்கள் மனித வாழ்வினை சிறப்பாக ஆக்கிக்கொள்ள
வழிகோலுகின்றன. இஸ்லாமிய மார்க்கமானது மனித வாழ்வுக்கு தேவையான அனைத்துவித
அம்சங்களைக் கொண்டிருப்பது அது இறைவேதமென்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஷரீஆ அல்லாஹ்வினாலும் அவனது தூதரினால் முன்வைக்கப்பட்டதாக காணப்படும்
அதேவேளை பிக்ஹ் மனித முயற்சியின் விளைவாக கிடைக்கப்பெறுவது எனலாம்.
இந்தவகையில் அல்குர்ஆன், அஸ்ஸஷுன்னா, இஜ்மா, கியாஸ் ஆகிய மூலாதாரங்களின் ஊடாக
மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய சட்டக்கலையானது நபி (ஸல்) அவர்களது காலம் முதல் நவீன
காலம் வரை வளர்ச்சியடைந்துள்ள விதத்தினை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் நோக்கமாக
காணப்படுகின்றது. இவ்வாய்வானது விபரிப்பு ஆய்வு முறையியலின் ஊடாக
மேற்கொள்ளப்படுகின்ற வரலாற்றாய்வாகும். இஸ்லாமிய சட்டக்கலை தொடர்பாக எழுதப்பட்ட
நூல்கள், ஆய்வுகள், கட்டுரைகள், இணையக் கட்டுரைகள் போன்ற இரண்டாம் நிலைத்
தரவுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாத்தில்
காணப்படுகின்ற ஷரீஆக் கலைகளில் பிரதானமாக கருதப்படும் சட்டக்கலையானது நபி (ஸல்)
அவர்களின் காலம் முதலே செயற்பட்டு வருகின்றது. நபியவர்களின் மரணத்தின் பின்னர்
அல்குர்ஆன், அஸ்ஸஷுன்னா ஆகிய இரு முதற்தர மூலாதரங்களுக்கு அடுத்தபடியாக இஜ்மா,
கியாஸ் தோற்றம் பெற்றன. இந்தவகையில், பிரச்சினையொன்றிற்கு தீர்வைப் பெறுவதற்கான
மூலாதாரங்கள் நான்காக வியாபித்தன. குலபாஉர் ராஷிதூன்களின் காலத்திற்கு பின்னர் ஏற்பட்ட
ஆட்சி விஸ்தரிப்பும், இஸ்லாத்தின் பரவலும் சட்டக்கலையின் அவசியத்தை மேலும் அதிகரித்தன.
இதன்காரணமாக, ஸஹாபாக்கள், தாபிஈன்கள் ஆகியோரின் மாணவர்கள் பல்வேறு
பிரதேசங்களுக்கும் குழுக்களாக செயற்பட்டு சட்டக்கலைத் துறைக்கு பல்வேறு பங்களிப்புகளை
செய்தனர். அவற்றுள் நூலாக்கம், சட்டத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள் போன்றன அதிகமாக
இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட, இமாம்களை பின்பற்றுதல் “தக்லீத் சிந்தனை”
இஸ்லாமிய சட்டத்துறை வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமைந்தது. ஒவ்வொரு குழுவினரும்
ஒரு இமாம் வழிநின்று சட்டங்களைக் கூறுவது அதிகரித்த காரணத்தில் இஸ்லாமிய சமூகத்தில்
இஜ்திஹாத் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களிலும் இமாம்கள் வழிநின்று தீர்ப்புக்களை
புகஹாக்கள் வழங்கினர்.
இதன்தொடரில், இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து இஸ்லாமிய சட்டவியல்
இழுபறி நிலையில் காணப்பட்டாலும், இத்துறையில் புதிய கோணங்களில் நின்று அறிஞர்கள்
சிந்தித்ததன் விளைவாக இஸ்லாமிய சட்டக்கலையில் பல சிந்தனைகள் தோற்றம் பெற்றன.
அவற்றுள், கூட்டு இஜ்திஹாத், ஒப்பீட்டு இஜ்திஹாத், பிக்ஹ் கலைக்களஞ்சியங்கள், தய்ஸீருல்
பிக்ஹ், பிக்ஹுல் அகல்லிய்யா, பிக்ஹுல் இஃக்திலாப், பிக்ஹுத் தஆயுஷ் போன்றன
குறிப்பிடத்தவைகளாகும்.