dc.description.abstract |
நாவல் மேற் குலகில் நிலமானிய சமுதாய அமைப்பின் சிதைவிற்குப்பின்னர் தோன்றிய
முதலாளித்துவ சமுதாய அமைப்பின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இலக்கிய
வடிவமாகும். ஐரோப்பியரின் கீழைத்தேய வருகையைத் தொடர்ந்து உரைநடையின்
வளர்ச்சியாகத் தமிழிலும் நாவல் இலக்கியம் தோற்றம் பெற்றது. இருபதாம்
நுற்றாண்டில், தமிழ் நாவல் இலக்கிய உலகில் அசோகமித்திரன் ஓர் தவிர்க்க முடியாத
நாவலாசிரியர். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேல் எழுத்துலகில் பிரகாசித்தவர். இவர்
02 குறுநாவல் தொகுப்புக்கள் உட்பட 09 நாவல்களைப் படைத்துள்ளார். இவருடைய
நாவல்களில் கரைந்த நிழல்கள் (1969), தண்ணீர் (1973), 18 ஆவது அட்சக்கோடு
(1977), ஆகாயத்தாமரை (1980), இன்று (1984), ஒற்றன் (1985), மானசரோவர் (1989)
முதலியவை சிறப்புக்குரியவை. இவருடைய குறுநாவற் தொகுதிகளான விடுதலை
(1979), இருவர் (1989) என்பவை உட்பட பம்பாய் (1944), லீவு லெட்டர், விழா, மணல்,
தீபம் முதலிய குறுநாவல்களும் இவரின் படைப்பாளுமையின் திறனை
வெளிக்காட்டுகின்றன. அசோகமித்திரனின் படைப்புக்கள் சமகால நகர்ப்புற நடுத்தர
மக்களின் சிக்கல்களைக், கொண்டாட்டங்களைத், துன்பங்களை மிகச்சிறப்பாக
முன்வைத்தவை. பெரும் துயரத்தை எளிய சொற்களில் வெளிப் படுத்தி வந்த
அசோகமித்திரன் சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் மிகச்சிறப்பான
வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தியவர். இவர் தன் கதைகளில்
எந்தவொரு தீர்வையோ, நியாத்தையோ முன்வைப்பதில்லை. மாறாக அவர்
சாமானியர்களின் வாழ்வை அவர்களின் பார்வையில் பதிவு செய்கிறார். நாவல்களைத்
தொடர்ந்து படிக்கிற பொழுது அசோகமித்திரன் என்ற மனிதரையும், வாழ்க்கைச்
சூழலையும் தவிர்த்து விட்டு அவரது நாவல்களை நாம் பார்க்க முடியாது. இவரது
படைப்புக்கள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தைக் கதைக்களமாகக்
கொண்டிருக்கும். இவரது கதை எழுதும் பாணி தனித்தும் கொண்டது. உணர்ச்சி
வசப்பட்ட நடையைத் தவிர்த்துச் சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதும் வழக்கம்
கொண்டவர். நவீனத்துவத்தின் சில அம்சங்கள் அசோகமித்திரன் படைப்புக்களில்
இழையோடினாலும் இவரின் படைப்புக்கள் எதார்த்தவாதம் என்ற எல்லைக்குள்தான்
இடம்பெறுகின்றன. அசோகமித்திரனின் எழுத்துக்கள் வாசகனை அமுக்குவதில்லை.
குறிப்பாக இவரின் நாவல்களில் விடப்பட்டுள்ள இடைவெளிகளில் வாசகன் சுதந்திரமாகப்
பயணம் செய்யலாம். இந்த இடைவெளிகள் அதிகளவில் இருப்பது, அசோகமித்திரன்
எழுத்துக்களின் தனித்தன்மை ஆகும். அவருடைய கதைகளின் உள்ளடக்கத்தினை
விடவும் அவருடைய நடையே அவருடைய ஆளுமையை அறிந்து கொள்ளப் பெரிதும்
உதவுகின்றது. அவருடைய எழுத்தில் கதையின் சம்பவங்கள் காட்சிகளாகச் சலனம்
கொள்கின்றன. புற உலகின் நிகழ்வுகள் மட்டுமன்றி அக உலகும்
காட்சிப்படிமங்களாகவே தோன்றுகின்றன. தமிழ் நாவல் இலக்கிய உலகில் இவரின்
வகிபங்கு எத்தகையது என்பதை ஆராயவேண்டிய தேவை உள்ளது. எனவே
அசோகமித்திரனின் நாவல்களை ஆராய்ந்து அவர் பெறும் இடத்தினை மதிப்பீடு செய்து
ஆவணப்படுத்தும் நோக்கில் இவ்வாய்வு மேற் கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வானது
பண்புசார் முறைமையைக் கொண்டமைந்து, விபரணப் பகுப்பாய்வு முறை,
விமர்சனமுறை ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாய்விற்கு அசோகமித்திரனின் நாவற் படைப்புக்கள் முதன்மைத் தரவுகளாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், துணை நிலைத் தரவுகளாக அவரின் நாவல்கள்
தொடர்பான கட்டுரை நூல்கள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் போன்றவையும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. |
en_US |