Abstract:
கல்முனைக் கடற்றொழில் மாவட்டமானது 12 பிரதேச செயலகப் பிரிவுகளையும் 219 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. 57 மீன் பிடி கிராமங்களும் 65 மீன் பிடி மையங்களும் 121 மீன் பிடி தளங்களும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. மீன் பிடிப்போரில் செயற்படு மீனவர்கள் 19,039 பேர் உள்ளனர். மொத்த மீனவ சனத்தொகை 25,025 பேராகும். இங்கு மொத்தமாக 17,156 மீனவ குடும்பங்கள் காணப்படுகின்றனர் (District Fisheries Office, Kalmunai – 2008). இவ்வாய்விற்கான தரவுகளும் தகவல்களும் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. தரவுகள் பண்புசார் மற்றும் அளவுசார் முறைகளினூடாகப் பெறப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் புள்ளிவிபரவியல் பகுப்பாய்வு முறையினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் தொகுத்தறி முறையினைப் பிரதானமாகவும் உய்த்தறி முறையினைத் துணையாகவும் கொண்டு பெறப்பட்டுள்ளன மீன் பிடித்துறையில் ஒரு சிறந்த முகாமைத்துவமின்மையால் அங்கு வாழும் மீனவர்களால் போதியளவு வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடிவதில்லை. இம் மாவட்ட மீன்பிடித்துறையில் நவீன மீன்பிடி உபகரணங்களோ வேறு நவீன தொழில்நுட்பமோ குறைந்தளவில் பயன்படுத்தப்படுகின்றமையால் இப்பிரதேச மீன்வளம் சுரண்டலுக்கு உட்படுகின்றது. ஆய்வுப் பிரதேசத்தில் வாழும் பெரும்பாண்மையான மக்கள் கரையோர மீன்பிடியையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பினும் அதனை விருத்தி செய்வதற்கான தொழில்நுட்பவியல் மாற்றங்களை அறிந்திருப்பது மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகிண்றது. அதன் காரணமாக இப்பிரதேச மீன்பிடியில் ஈடுபடும் குடும்பங்கள் வறுமைக்குட்பட்டவர்களாகக் காணப்படுவதால் அவர்களுடைய பொருளாதார வளர்ச்சி குன்றிக் காணப்படுகிண்றது. எனவே, இப்பிரதேச மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்குச் சிறந்த தொழில்நுட்பப் பயிற்சியை வழங்குவதனூடாகவும் மானிய அடிப்படையிலான மீனவக் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாகவும் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் என இவ்வாய்வு பரிந்துரைக்கின்றது.