Abstract:
ஒரு சமூகத்தின் விருத்தியைப் பொறுத்தவரை அங்கு கல்வியென்ற ஒரு விடயம் அதிக
தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. பிரதானமாக கல்வியின் மூலமே ஆரோக்கிய
சமூகத்தை கட்டியெழுப்ப கூடியதாக அமைகிறது. அந்தவகையில் ஒரு மாணவன் தனது
உயர் கல்வியை தொடரவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இளங்கலை மற்றும்
முதுகலை பட்டப்படிப்பை தொடரும் ஒரு கட்டமைப்பையே நாம் பல்கலைக்கழகம் என
அழைக்கின்றோம். இத்தகைய பல்கலைக்கழகங்கள் நாடளாவிய ரீதியில் அமைந்திருப்பதும்
, நாடளாவிய ரீதியில் மாணவர்களின் அதிகபட்ச பங்களிப்பு காணப்படுவதுமே ஒரு
விருத்தியடைந்த நாட்டின் தன்மையாகும். அதனடிப்படையில் இலங்கையில் இவ்வாறான
நிலைமை சமகாலத்தில் அனைவருக்கும் காணப்படுகின்றதா? என்றால் அவை
கேள்விக்குறியான விடயமேயாகும். குறிப்பாக மலையக மாணவர்களைப் பொறுத்தவரை
உயர்தரம் வரை விருத்தியடையும் அவர்களின் கல்விச் செயற்பாடானது பல்கலைக்கழகம்
என்றவொரு உயரிய நிறுவனத்தை அடைய போதுமானதாக அமையவில்லை. குறிப்பாக
இலங்கையின் 15 தேசிய பல்கலைக்கழகங்கள் காணப்பட்டாலும் இவற்றில் மலையக
மாணவர்களின் அடைவு மட்டம் நூற்றுக்கு ஒரு விகிதமே காணப்படுகின்றது. அந்தவகையில்
மலையகத்தை பொறுத்தவரை பல தசாப்தங்களை கடந்தாலும் பல்கலைக்கழக நுழைவு
விகிதமானது அடிநிலையிலேயே காணப்படுகிறது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களில்
இருந்து பல்கலைக்கழக அடைவு மட்டம் அதிகமாக காணப்படும் அதேவேலை மலையக
பிரதேசத்தை பொறுத்தவரை 65 ஆண்டுகள் கடந்தும் ஒரு சதவீதத்தை கடக்கவில்லை
இந்நிலையே இச்சமூகத்தின் கல்வியியல் ரீதியான பின்னடைவை எடுத்துக்காட்டுகிறது.
அதனடிப்படையில் இவ்வாய்வானது மலையக மாணவர்கள் பல்கலைக்கழக அடைவு
மட்டத்தை அடைவதில் உள்ள சவால்களை இனங்காணுவதை பிரதான நோக்கமாக
கொண்டுள்ளது. ஆய்வானது பண்புசார்ந்த முறையியல் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வானது நு / கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தை
ஆய்வு நிறுவனமாக கொண்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. முதலாம் நிலை தரவு
சேகரிப்பு கருவிகளாக நேர்காணல், விடய ஆய்வு, குவிமைய குழு கலந்துரையாடல், நேரடி
அவதானமும், இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு கருவிகளாக ஆய்வறிக்கைள், புத்தகங்கள்,
பாடசாலை வருடாந்த அறிக்கைகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட
தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்வுக்குற்படுத்தி முடிவுகள் பெறப்பட்டன. அந்தவகையில்
இவ்வாய்வின் பெறுபேறுகளாக மலையகத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, எதிர்காலம்
தொடர்பான அக்கறையின்மை, பொருளாதார பின்னடைவு, தவறான நட்பு வட்டாரம்,
குதூகலத்திற்கு முக்கியத்துவமளித்தல், குடும்ப சூழல் முறையாக இன்மை, வெளிபிரதேச
மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்தல், வளப் பற்றாக்குறை என்பன பல்கலைக்கழக
அடைவு மட்டத்தை அடைவதில் சவாலாக அமையப் பெறுகின்றன. அதனடிப்படையில்
இவ்வாய்வின் பரிந்துரைகளாக மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தொடர்பான
விளிப்புனர்வை ஊட்டல், ஆசிரியர் வளங்களை முழுமையாக்குதல், மாணவர்களுக்கு
பொருளாதார செலவுகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குதல், தொழிநுட்பத்தை விருத்தி
செய்து செயல்முறையோடு நடைமுறைப்படுத்தல், உட்பிரதேச மாணவர்களுக்கு
முக்கியத்துவமளித்தல், எதிர்காலம் தொடர்பான புரிந்துணர்வு நிகழ்ச்சி திட்டங்களை
நடத்துதல், பாடசாலை நிர்வாகம் மாணவரின் விருப்பிற்கேற்ப பாடங்களை தெரிவுச் செய்யும்
சந்தர்ப்பங்களை அமைந்து கொடுத்தல். மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சுக்களை
தொடர்ந்து நடத்துதல் போன்றவற்றினை மேற்கொள்ளல் வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.