Abstract:
தென்னாசியாவிலே தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடாக
இலங்கை காணப்படுகின்றது. அவ்வகையில் வரலாற்றாசிரியர்களால் நீண்ட காலமாக
கவனத்தில் கொள்ளப்படாத பிராந்தியமாக வன்னிப் பிராந்தியம் காணப்படுகின்றது.
எனினும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல்
ஆய்வுகளின் பின்னனியில் இப் பிராந்தியம் வரலாற்றடிப்படையில் முக்கியம் பெறுகின்றது
என்பது உணரப்பட்டது. ஈழநாட்டில் பிரித்தானியர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு பல
நூற்றாண்டுகளாக நிலைபெற்ற குறுநில அரசுகள் வன்னியர்கள் என்ற சிற்றரசர்களாகும்.
பொதுவாக இவை இலங்கையின் வரட்சி வலயத்திலே அமைந்திருந்தன. அவ் வகையில்
வடமாகாணத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றாக வவுனியா மாவட்டம் காணப்படுகின்றது.
ஓர் நாட்டின் அல்லது ஒர் இனத்தின் ஆதிகால இடைக்கால வரலாற்றை அறிந்து
கொள்வதில் அக் காலங்களில் தோற்றம் பெற்ற மூலாதாரங்கள் முக்கியம் பெறுகின்றன.
அவற்றுள் சம்பவங்கள் இடம்பெற்ற காலத்தில் பொறிக்கப்பட்ட நம்பகத் தன்மையான
ஆதாரமாக பிராமிக் கல்வெட்டுக்கள் விளங்குகின்றன. பிராமி எழத்தின் தோற்ற
காலத்தையிட்டு பல கருத்துக்கள் காணப்பட்டாலும் தென்னாசியாவில் கி.மு 3ம்
நூற்றாண்டிலிருந்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டமைக்கு சான்றாதாரங்கள்
காணப்படுகின்றன. இப் பிராமிக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில்
எழுதப்பட்டுள்ளதுடன் இவை ஒரிரு வரிகளில் பௌத்த துறவிகளுக்கு அல்லது பௌத்த
சங்கத்திற்கு அல்லது மதத்திற்கு சாதாரண மக்கள் தொடக்கம் அரச வம்சத்தவர் வரை
பலதரப்பட்ட பிரிவினரால் வழங்கப்பட்ட குகை, கற்படுக்கை, கல்லாசனம், கால்வாய்,
தானியம், குளம், காசு போன்ற தானங்கள் பற்றிய விபரங்களைத் தருகின்றன. இவை
கி.மு 3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 4,5ஆம் நூற்றாண்டு வரை
பயன்படுத்தப்பட்டிருப்பதனால் ஏறத்தாழ 700, 800 ஆண்டு கால இலங்கையின் புராதன
வரலாற்றை அறிய உதவுகின்ற நம்பகரமான ஆதாரங்களாகவுள்ளன. அவற்றுள் ஈழத்
திராவிட மக்களதும், அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களதும் வாழ்வியல்
நடவடிக்கைகளை அறிவதற்கும் பிராமிச் சாசனங்கள் முதன்மையான சான்றுகளாக
விளங்குகின்றன. அவ்வகையில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குள
கல்வெட்டுக்கள்(35) , எருபொத்தான கல்வெட்டுக்கள்(12) , மகாகச்சக் கொடி
கல்வெட்டுக்கள்(04), வெடுக்கினாரி மலைக் கல்வெட்டுக்கள்(03) போன்றன
வவுனியாவின் தெற்குப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இவை கி.மு 2800
வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் பேச்சு வழக்கினையும்,தமிழின்
செல்வாக்கினையும் கொண்டுள்ளதென பேராசிரியர் பரணவிதான கூறுகின்றார்.
அத்துடன் பாளி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தமிழருக்கு எதிரான தகவல்களை
முறியடித்து இவர்கள் தமக்கென ஓர் இனம்,மதம்,மொழி, பண்பாடு, அரச உருவாக்கம்,
வணிகம் என்பவற்றோடு தனித்துவமாக இலங்கையின் பல பிரதேசங்களில் பரவலாக
வாழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றது. வுவனியாப் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட
பிராமிக் கல்வெட்டுக்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் சமூக, பொரளாதார
விடயங்களை வெளிப்படுத்துவதே இவ் ஆய்வின் நோக்கம் ஆகும். வரலாற்று
அணுகுமுறையின் அடிப்படையில் விவரண ஆய்வாக அமையப்பெற்ற இவ்வாய்விற்கு
தேவையான தகவல்கள் முதல்நிலை தரவுகள், இரண்டாம் நிலைத் தரவுகள் என்ற
அடிப்படையில் பெறப்பட்டன. அவ்வகையில் களஅய்வுகள் முதல்நிலைத் தரவுகள் என்ற
வகையில் அடங்க குறித்த இவ்விடயம் தொடர்பாக வெளிவந்த நூல்கள், ஆய்வுக்
கட்டுரைகள், சஞ்சிகைகள் இரண்டாம் நிலைத் தரவுகளாகவுள்ளன.