Abstract:
இலங்கைத் தமிழர்களது பண்பாட்டு வரலாற்றினை நிலைநிறுத்திக் கொள்ளும்
மையப் புள்ளியான வடஇலங்கையில் வரலாற்று மூலங்களான இலக்கியங்கள்
மற்றும் தொல்லியல் சான்றுகள் ஒப்பீட்டளவில் தென்னிலங்கையை விட மிகக்
குறைவாகவே கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரிய
தொல்லியல் சான்றுகளே இன்று எமக்குக் கிடைத்துவருகின்றன. யாழ்ப்பாண
இராசதானியின் தோற்றம் தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். வட இலங்கையில் வாழ்ந்த
தமிழ் மக்கள் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் கொண்டிருந்த
அக்கறை தென்னிலங்கை மக்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக
இருந்தமையும், பின்னர் ஐரோப்பியரது குடியேற்ற காலகட்டத்தில் இலங்கையில்
பின்பற்றப்பட்ட கலையழிவுக் கொள்கைகளுடன் இணைந்த நடவடிக்கைகளும்
வடஇலங்கையுடன் தொடர்புபட்ட தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கப்பெறாது
போனமைக்கான காரணமாகின்றன. இருந்தபோதிலும்
கலையழிவுக்கொள்கையில் இருந்து தப்பிப்பிழைத்த புராதன நல்லூர்
இராசதானிக்குரிய கருங்கற்சிற்பங்கள் பல நல்லூர் ”தவராயர்
திருக்குளத்திலிருந்தும், யாழ்ப்பாணம் முஸ்லிம் குடியிருப்பில் அமைந்துள்ள
கமால் வீதியிலிருந்தும் கிடைக்கப்பெற்றமையானது எமது பண்பாட்டை
நிலைநிறுத்திக் கொள்வதற்கு பக்கபலமாக அமைந்து கொண்டது . இவ்வாறு
கிடைக்கப்பெற்ற சிற்பத் தொகுதிகளைப் பாதுகாத்து காட்சிப்படுத்தும் பணியினை
யாழ்ப்பாணம் தேசிய அருங்காட்சியகம் மேற்கொண்டு வருகின்றது. அங்குள்ள
சிற்பத் தொகுதிகள் அதிகளவாக தென்னிந்திய கலைப்பாணியை
ஒத்தவையாகவே உள்ளன. குறிப்பாக சோழர், பாண்டியர், நாயக்கர்
கலைப்பாணிக்குரியவையாகக் காணப்படுகின்றன. அவற்றுள் சோழர்
கலைப்பாணிக்குரிய சிற்பங்களை அடையாளம் கண்டு கொள்வதே எனது
ஆய்வின் நோக்கமாகவுள்ளது.