Abstract:
மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும்,
அறிவியலும் ஆகும். இது நோய்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றைக்
குணப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல்
செயற்பாடாகும். மருத்துவம் இல்லையென்றால் உலகில் மனித இனம் என்றோ
அழிந்திருக்கும். இதனால் அனைவராலும் போற்றப்படும் உன்னத பணியாக
மருத்துவம் காணப்படுகிறது. புராதன காலத்தில் ஒருவரின் உடல்
ஆரோக்கியத்திற்குப் பொறுப்பானவராக கடவுள் கருதப்பட்டார். இதனால்
நோயிலிருந்து விடுபட கடவுளிடம் வேண்டி படைத்தல், மந்திரம் ஓதுதல்,
தாயத்துக்கள் அணிதல் போன்ற செயற்பாடுகளில் பண்டைய மக்கள் ஈடுபட்டு
வந்தனர். ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட மனிதனால் எதனையும் சாதிக்க
முடியும் என்ற நம்பிக்கையும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும்
நோய்களுக்கான காரணங்களை, அறிகுறிகளை கண்டறிந்து பரிகாரங்களை
பற்றி ஆய்வு செய்தது. நோயும், நோய் தீர்த்தலும் மருத்துவத்துறை
சார்ந்தவையாயினும், நாட்டில் நோய் வராமல் தடுப்பதும், வந்த நோயைப்
போக்குவதிலும் நாட்டினை அரசாட்சி செய்கின்ற மன்னருக்கு முக்கிய
பங்கிருந்தது. இலங்கையின் மனிதவரலாறு இற்றைக்கு 125000 ஆண்டுகளுக்கு
முன்னராயினும், மருத்துவத்துறையின் தொன்மம் தொடர்பான வரலாறு
மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது. மக்களின் நலன்களை,
ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு மன்னர்கள் பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டியிருந்தது. மருத்துவ சேவைகள் பல மன்னர்களால்
வழங்கப்பட்டமை பற்றி இலக்கிய, தொல்லியல் சான்றுகளுள்ளன. இதனால்
புராதன கால இலங்கையில் மன்னர்கள் அரசியல், பொருளாதார
நடவடிக்கைகளில் மட்டுமன்றி சமூகநலன் பேணும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு,
நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிகரமான சுகவாழ்விற்கும்
பங்களிப்புக்களை வழங்கியிருந்தனர் என்பதனை இலக்கிய, தொல்லியல்
சான்றுகளின் துணைகொண்டு எடுத்துக்காட்டுவதே இவ்வாய்வின் முக்கிய
நோக்கமாக உள்ளது. இவ்வாய்வுக்காக முதனிலைத் தரவுகளாக பாளி, சிங்கள
இலக்கியங்களும் தொல்பொருள் மூலாதாரங்கள் என்ற வகையில்
கல்வெட்டுக்களும், கட்டட எச்சங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இரண்டாம் நிலைத் தரவுகள் என்ற வகையில் இவ்வாய்வுத் தலைப்புடன்
தொடர்புடைய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தளக்
கட்டுரைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு இவ்வாய்வு
முன்னெடுக்கப்பட்டுள்ளது.