Abstract:
அரசியற் செயற்பரப்பிலே பிரதானமாகக் கொள்ளப்படும் அரசியற் கட்சிகள்
ஜனநாயக நாடுகளின் அளவுகோலாகவும் கொள்ளப்படுகின்றது. சுதந்திரமான
கட்சிகளின் இருப்பும், நிலவுகையும் ஜனநாயகத்தை பலப்படுத்தி மக்களாட்சியை
உறுதிப்படுத்துகின்றன. இலங்கையும் ஓர் ஜனநாயக நாடு என்பதனால்
கட்சிகளின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால்
பல்வேறு கட்சிகள் தோன்றி மக்களது ஆதரவோடு செயற்படுகின்றன.
செயற்பாட்டிலே உள்ள சகல கட்சிகளாலும் பாரிய மக்களாதரவோடு
ஆட்சியைப் பிடிக்க முடிவதில்லை. இலங்கை அரசியற்பரப்பிலே சோல்பரி
அரசியலமைப்புத் தொடக்கம் பொதுஜன பெரமுனக் கட்சி
தோற்றுவிக்கப்படும்வரை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி எனும் இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி
அரசியற்பரப்பில் செல்வாக்குச் செலுத்தி வந்தன. இதனாலேயே இலங்கையின்
அரசியற் கட்சி முறைமையானது இரு தலையாய கட்சிகளின் கூட்டுக்
கட்சிமுறை என்று அழைக்கப்பட்டடு வந்தது. இக்கட்சிகளைத் தவிர்த்து
அரசியல் விளையாட்டில் பாரிய தாக்கத்தை செலுத்த முடியாத பல கட்சிகளும்
காணப்படுகின்றன. இந்நிலையிலே 1946 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற ஐக்கிய
தேசியக் கட்சி மற்றும் 1951 ஆம் தோற்றம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஆகிய பிரபல்யமும், அனுபவம் மிக்க இரு கட்சிகளையும் தோற்கடித்து,
தோன்றிய குறுகிய காலப்பகுதியிலே வெற்றி பெற்ற ஒரு கட்சியாக விளங்குவது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியாகும். நாட்டிலே காணப்பபடும் அரசியல்
உறுதியின்மை, பாதுகாப்பு பிரச்சினை, இனவாதம், மதவாதம் மற்றும் பலமான
தலைமைத்துவத்தின் தேவை என்பன புதிய கட்சியின் தோற்றுத்திற்கு சாதகமாய்
அமையும் விடயங்களாகும். தோன்றிய காலப்பகுதியிலே வெகு விரைவாக
எழுச்சியடைந்து பாரிய மக்கள் ஆதரவோடு ஜனாதிபதியையும்,
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் பெறுவது என்பது
சாதாரண விடயமல்ல. இத்தகு சாதனை புரிந்து இன்றைய அரசியலில் தீர்மானம்
மிக்கதொரு கட்சியாக விளங்கும் பொதுஜன பெரமுன கட்சியின் தோற்றம்
மற்றும் வளர்ச்சி என்பவற்றை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.