Abstract:
குடும்பத்தின் மூலமாகவே சமூகம் எனும் கட்டிடம் கட்டமைக்கப்படுகின்றது. அக்கட்டடத்தின் அஸ்திவாரமாகவும் குடும்பமே அமையப் பெறுகிறது. குடும்ப அமைப்பு வலிமையாக அமையும் போது சமூக அமைப்பும் வலிமையுடையதாக மாறுகின்றது. இதற்கென்று இஸ்லாம் குடும்ப வாழ்வு அழகாகவும் ஸ்திரமாகவும் அமைய பல்வேறு வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இஸ்லாமிய குடும்ப கட்டமைப்பில் பெண்களின் முக்கியத்துவம், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதற்கான தீர்வுகள் மற்றும் இஸ்லாம் குடும்ப அமைப்பிற்கு வழங்கக்கூடிய முக்கியத்துவம் எக்காலத்திற்கும் ஏற்றவகையிலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் அமையப் பெற்றுள்ளது. அந்தவகையில் இஸ்லாமிய குடும்ப கட்டமைப்பில் பெண்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்கள் கல்வி, தொழில் துறைகளில் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றுக்கான இஸ்லாமிய வழிகாட்டல்களை கண்டறிதலை நோக்கமாக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்புரீதியான ஆய்வு வடிவத்தை தழுவி முன்னைய இலக்கியங்களின் மீளாய்வை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வுக்காக இஸ்லாத்தின் மூல ஆவணங்களான அல்குர்ஆன், அல்ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வரலாறு, தற்கால முஸ்லிம் அறிஞர்களின் ஆக்கங்கள், ஆய்வுகள் போன்றவற்றில் காணப்படும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தொகுத்தறிதல் முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் தொடர்பாக எழக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் அழகான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது என்பதே இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாக அமைந்துள்ளது. இவ்வாய்வு பெண்கள் தொடர்பான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு துணையாக அமையவல்லது என எதிர்பார்க்கப்படுகிறது.