Abstract:
உலகளாவிய ரீதியில் பெண்ணிலைவாதம், பெண் விடுதலை போராட்டம் போன்ற கருத்துக்கள் வளர்ந்து கொண்டிருக்கும் வேளையில் பெண் கல்வியின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. மேலும் உலக நாடுகளில் பெண்கள் பல்வேறு உயர் தொழிலை ஆற்றுபவர்களாகவும் பல நாடுகளின் தலைவிகளாகவும் காணப்பட்டு வந்தாலும் கூட கல்வி கற்பதில் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில் எதிர்நோக்கும் சவால்களை இனங்காணும் நோக்கில் சம்மாந்துறை கல்வி கோட்டத்திற்குட்பட்ட 5 பிரதான பாடசாலைகள் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வினை மேற்கொள்வதற்காக முதலாம்நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம்நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. முதலாம் நிலைத்தரவுகளாக வினாக்கொத்து, நேர்காணல் மற்றும் நேரடி அவதானிப்பு ஆகிய முறையும் இரண்டாம்நிலைத் தரவுகளாக நூல்கள், பாடசாலை புள்ளிவிபர திரட்டு அறிக்கைகள், இணையத்தளங்கள், சஞ்சிகைகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டன. இதன் ஊடாக கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் வறுமை, பெற்றோர்களின் கல்விநிலை, பாடசாலை கல்வியில் திருப்தியின்மை, பகுதிநேர வகுப்புகளிற்கு செல்வதில் இடையூறுகளை எதிர்கொள்ளல், இளவயது திருமணம், ஆங்கில மற்றும் தொழிநுட்ப அறிவில் பின்தங்கிய நிலை, தொழிற் சந்தையில் உள்நுழைவதில் சிக்கல்கள் போன்ற சவால்கள் இனங்காணப்பட்டன. வறுமை நிலையில் காணப்படும் குடும்பங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல், மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை அதிகரித்தல், இளவயது திருமணம் பற்றிய விளிப்பூட்டல்களை வழங்குதல் போன்றவற்றையும் பரிந்துரைகளாக குறிப்பிடலாம். இப்பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில் எதிர்கொள்ளும் சவால்களை குறைப்பதற்கும். பொருளாதார மற்றும் சமூக ரீதியில் மேலோங்கச் செய்வதற்கும் இவ் ஆய்வானது முக்கிய களமாக அமைந்துள்ளது.