Abstract:
மாணவர்களது நகர்ப்புறப் பாடசாலைகளின் தெரிவானது கிராமப்புறப் பாடசாலைகளின் விளைதிறனில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைவதனை ஆராய்ந்து முடிவுகளையும் உரிய விதப்புரைகளையும் முன்வைக்கும் நோக்கில் இவ் அளவை நிலை ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்புக் கோட்டத்திற்குட்பட்ட கிராமப்புறப் பாடசாலைகளினை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுவதனால் குறித்த பிரதேசத்திலுள்ள கிராமப்புறப் பாடசாலைகளிலிருந்து நோக்க மாதிரியினடிப்படையில் 1C வகைப் பாடசாலை ஒன்றும் வகை II பாடசாலை நான்கும் என 5பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. ஆய்வுக்கான சிறப்பு நோக்கங்களாக மாணவர்கள் கனிஷ்ட இடைநிலைக்கல்வியினைத் தொடர்வதற்கு நகர்ப்புறப் பாடசாலைகளினைத் தெரிவு செய்வதற்கான காரணங்களைக் கண்டறிதல், கிராமப்புறப் பாடசாலைகளிலுள்ள குறைபாடுகளினைக் கண்டறிதல், மாணவர்கள் நகர்ப்புறப் பாடசாலைகளினைத் தெரிவு செய்வதால் கிராமப்புறப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணுதல், கிராமப்புறத்தில் உள்ள பாடசாலைகளின் விளைதிறனை மேம்படுத்துவதற்குப் பொருத்தமான ஆலோசனைகளை முன்வைத்தல் போன்றன அமைகின்றன. அதிபர்கள் 5பேரும், ஆசிரியர்கள் 35பேரும், நகர்ப்புறப் பாடசாலைகளினைத் தெரிவு செய்யாத மாணவர்கள் 245பேரும் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், நகர்ப்புறப் பாடசாலைகளினைத் தெரிவு செய்த மாணவர்கள் 96பேர் மற்றும் நகர்ப்புறப் பாடசாலைகளினைத் தெரிவு செய்த மாணவர்களது பெற்றோர்கள் 96பேரும் நோக்கமாதிரியினடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்மாதிரிகளிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல், ஆவணம் ஆகிய ஆய்வுக்கருவிகளின் மூலம் பெறப்பட்ட தரவுகள் அளவு மற்றும் பண்பு ரீதியாகவும் பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டு Excel ஊடாக அட்டவணையின் மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. கிராமப்புறப் பாடசாலையிலுள்ள மாணவர்கள் ஆங்கில மொழிமூல கல்வியினைப் பெற்றுக் கொள்வற்காகவே நகர்ப்புறப் பாடசாலைகளைத் தெரிவுசெய்கின்றனர், கிராமப்புறப் பாடசாலைகளில் ஆங்கிலம் சார்ந்த வசதிகள் இல்லை, கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்களாகவே காணப்படுகின்றனர். போன்ற முடிவுகள் கண்டறியப்பட்டதுடன் கிராமப்புறப் பாடசாலைகளில் ஆங்கில மொழிமூலக்கல்வியினைக் கொண்டுவருவதற்கு பாடசாலை மற்றும் சமூகமும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும். பாடசாலையானது மாணவர்களுடன் சிறந்த உறவுகளினை வளர்த்துக்கொள்வதற்கான செயற்றிட்டங்களினை அதிபர் மேற்கொள்ள வேண்டும் போன்ற விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.