Abstract:
இலங்கையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையானது 2020 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் அதிகமாக நேரடி முறையே காணப்பட்டது. நேரடியான இச்செயற்பாட்டில் பல சாதகமான அணுகூலங்கள் இருப்பது போல பல பிரதிகூலங்களும் காணப்படுகின்றன அண்மைக் காலங்களாக இலங்கையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இம்மாற்றங்களில் ஒன்றாக இணையவழிக்கற்றல் அமைவதுடன் அது பாரிய அளவு வளர்ச்சி அடைந்த ஒன்றாகவும் காணப்படுகின்றது. இந்த வகையில் இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீட 2017/2018 வருட மாணவர்கள் தமது முதலாம் வருட கல்வியாண்டை நேரடிக்கற்றல் முறையிலும், இரண்டாம் வருடத்தை இணையவழி;க் கற்றல் முறையிலும் மேற்கொண்டனர். இவ்விரண்டு கற்றல் முறைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் சாதக பாதகங்களையும் ஒப்பிட்டு நோக்கி ஆய்வின் முடிவுகளை முன்வைப்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இந்த ஆய்வு தர மற்றும் எண்கணித ரீதியான ஓர் ஆய்வாகும். இவ் ஆய்வில் முதலாம் நிலைத்தரவுகளாக நேரடி அவதானிப்பு மற்றும் மூடிய வினாக்கொத்து எழுமாறான முறையில் கொடுக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. இரண்டாம் நிலைத் தரவுகளாக கற்றல் முறைமைகள் தொடர்பான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், மாணவப்பேரவையின் அறிக்கை மற்றும் இணையத்தளம் என்பன பயன்படுத்தப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Excel மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வரைபடங்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. நேரடிக்கற்றல் மற்றும் இணையவழிக்கற்றலுக்கடையிலான சாதக பாதக விடயங்களை இவ்வாய்வு அடையாளப்படுத்தியுள்ளது. மேலும் நேரடி கற்றல் மற்றும் இணையவழிக்கற்றலின் மூலமாக பெற்ற அணுகூலங்கள் பிரதிகூலங்கள் கலந்துரையாடப்படுவதுடன் நேரடிக் கற்றல் முறையால் மாத்திரமே ஆசிரியர் மாணவர் இடைத்தொடர்பு அதிகரிக்கப்படும் எனவும் இனங்காணப்பட்டிருந்தது. மேலும் இணையவழிக் கற்றலில் பல சவால்கள் எதிர்ப்பட்டிருந்த போதிலும் அதன் மூலம் புதுவிதமான அனுபவங்கள் பெறப்பட்டதாகவும், புதிய பல செயலிகளை இயக்கக் கூடிய அறிவு, ஆங்கில அறிவு என்பன விருத்தியடைந்து காணப்படுவதையும் அடையாளப்படுத்த முடிந்தது. அதேவேளை இணைய வழக்கற்றலானது கல்வி நடவடிக்கைகளில் மாணவர்களிடையே ஓரளவு திருப்தியினையே மாத்திரம் அடைந்து கொண்டமையை கண்டறிய முடிந்தது.