Abstract:
இவ்வாய்வு கோவிட்-19 பரவல் காலப்பகுதியில் இணையவழி ஊடாக முன்னெடுக்கப்பட்ட கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளில் அரபுக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திருப்தி நிலையை மதிப்பீடுவதுடன், இணையவழி கற்றலுக்குத் தடையாக அமைந்த காரணிகளை அடையாளம் காண்பதையும் நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரபுக்கல்லூரிகளில் தற்போது (2022) கல்வியைத் தொடரும் 270 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்துக்கள் பகிரிந்தளிக்கப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் SPSS (Version-26) மென்பொருளில் விபரணப் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு சராசரி, இடை, ஆகாரம், நியமவிலகல் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிர்வெண் அட்டவணை (Frequency Table) பெறப்பட்டது. பெறுபேறுகள் அட்டவணையிலும், சொற்களிலும் விபரண ரீதியில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவுகளுக்கு அமைய ஆசிரியர்களும் (84%), மாணவர்களும் (66.6%) பொது முடக்க காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளில் திருப்தியின்மையை வெளிப்படுத்தியுள்ளதுடன், இத்திருப்தியின்மையில் பல்வேறு காரணிகள் செல்வவாக்குச் செலுத்தியுள்ளன. அவற்றில் சில: குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக பொருத்தமான இணையத் தொடர்பு சாதனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமை (70.5%), பாடம் சார்ந்த சந்தேகங்களுக்குத் தெளிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாமை (59%), இணைய தடங்கள் (81.6%), குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கப்பட்டமை (63.3%), ஆசிரியர்களுக்கு இணையவசதிகளுக்காக மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமை (60%), மாணவர்களின் இடைவிலகள் அதிகரித்துள்ளமை (76%), மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டமை (76%) போன்றவற்றை குறிப்பிட்டுள்ளனர். மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு நிலை மீண்டும் தோன்றுமிடத்து இணையவழி கற்றல் மற்றும் கற்பித்லைப் பரிந்துரை செய்வதில் இரு தரப்பினரும் ஆர்வமற்றவர்களாக உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவ்வாய்வு எதிர்காலத்தில் நிகழ்நிலை கற்றலை அரபுக் கல்லூரிகளில் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கான மாற்றீடுகளை ஆராய்கின்ற வகையில் முக்கியத்துவம் பெறுவதுடன், இவ்வாய்வின் கண்டறிதல் எதிர்கால ஆய்வாளர்களுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமையக் கூடும்.