Abstract:
திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணை என்பது தங்களது திருமண வாழ்வில் இணைந்து கொள்வதற்கு முன்னராக தம்பதியினர் இருவரும் தங்களது எதிர்கால வாழ்வினை எவ்வாறு திட்டமிட்டுக் கொள்வது, திருமண வாழ்வில் காணப்படுகின்ற சவால்களை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொண்டு மகிழ்ச்சிகரமானதும் தருப்திகரமானதும் நிலையானதுமானதோர் குடும்ப வாழ்வினைத் திட்டமிட்டுக் கொள்வது போன்றவை தொடர்பானதோர் சிறந்த வழிகாட்டலினை வழங்குகின்றது. எனவேதான், இத் திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணை தொடர்பான தெளிவும் புரிதலும் எம் சமூகத்தின் மத்தியில் அதிலும் மிகக் குறிப்பாக திருமண வாழ்விற்குத் தயாராகும் இளைஞர் மற்றும் யுவதிகளிடத்தில் மிகவும் அவசியப்பாடானதோர் விடயமாக நோக்கப்படுகின்றது. அந்தவகையில், இவ்வாய்வானது திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணை என்றால் என்ன?, திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணையின் அவசியம் யாது? போன்ற ஆய்வு வினாக்களின் அடிப்படையில், சமூகத்தின் மத்தியில் போதியளவு விழிப்புணர்வு மற்றும் தெளிவின்றிக் காணப்படுகின்ற திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணை தொடர்பான எண்ணக்கருவிணை விளக்குதல், அதன் அவசியத்தினைத் தெளிவுபடுத்துதல் எனும் ஆய்வு நோக்கங்களினையும் கருத்திற் கொண்டு இவ்வாய்வானது பண்புரீதியான ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கான தரவுகள் மற்றும் தகவல்கள் யாவும் இத் தலைப்புத் தொடர்பாக எழுதப்பட்ட ஆய்வுகள், புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் நிகழ்நிலைத் தகவல்கள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளிலிருந்து பெறப்பட்டு இவ்வாய்வானது இலக்கிய மீளாய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இவ்வாய்வில் திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணையின் இலக்குகள் மற்றும் அதனூடான தாக்கங்கள் என்பன ஆராயப்பட்டுள்ளதுடன், இத் திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணை ஏன்?, எதற்காக அவசியப்பாடன ஒன்றாகக் காணப்படுகின்றது என்பதற்கான தெளிவுகளும் வழங்கப்பட்டுள்ளன.