Abstract:
போதைப் பொருட்கள் போதையேற்றிக் கொள்வதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மக்களால் நுகரப்படுகிறது. இச்செயற்பாடானது உடல், உள, சமூக நலத்திற்கு ஊறு விளைவிக்கும் செயற்பாடாகும். இதனால் தனிமனிதன், சமூகம் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் போதைப்பொருள் பாவனையாளர்கள் சட்டத்திற்குப் புறம்பாக செயற்படுபவர்களாக அடையாளப்படுத்தப்படும் போது அவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின் குடும்பத்தின் கோரிக்கைக்கேற்ப நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் புனர்வாழ்வு மையங்களுக்கு (Rehabilitation Centre) அனுப்பப்பட்டு சிகிச்சையின் பின் வெளியேறுகின்றனர். எனினும் அவ்வாறு வெளியேறுகின்றவர்களும் சூழ்நிலை காரணமாக மீண்டும் போதைப் பழக்கத்தை தொடர்வதை அவதானிக்க முடிந்தது. மேற்படி போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு உளவளத்துணை வளங்கும் இன்றைய பெரும்பான்மையான முஸ்லிம் உளவளத்துணையாளர்களைப் பொறுத்தவரையில் மேற்கத்தேய அல்லது பொது உளவளத்துணையைக் கற்று அதன் அடிப்படையில் மாத்திரம் முஸ்லிம்களுக்கு சேவை செய்கின்ற போது சில இடங்களில் இஸ்லாமிய கோட்பாடுகள், நடைமுறைகள், வரையறைகளைக் கடந்து பயணிக்கும் அபாயம்எழுந்துள்ளது. இந்த நிலையிலிருந்து முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும் என்பது காலத்தால் உணர்த்தப்பட்ட உண்மை. அந்த வகையில், இவ்வாய்வானது போதை பழக்கத்திற்குட்பட்ட முஸ்லிம் சேவை நாடிகளுக்கு உதவுவதில் இஸ்லாமிய உளவளத்துணையின் பங்கினை ஆராய்வதை இவ்வாய்வு நோக்கமாக கொள்கின்றது. பண்பு ரீதியான இவ்வாய்வானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகளிலிருந்து விபரிப்பு ஆய்வு முறையியலைப் பயன்படுத்துகின்றது. இவ்வாய்வுக்கான முதலாம் நிலை தரவுகள் சேகரிப்புக்காக ஆறு நிறுவனங்களைச் சேர்ந்த 11 அதிகாரிகளிடம் நேர்காணல் செய்யப்பட்டதோடு காத்தான்குடிப் பிரதேச செயலக சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஊடாக போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை பெறப்பட்டது. மேலும் ஆய்வுக்கான கோட்பாட்டு அமைப்புத் திட்டத்தினை நிறுவுவதற்காக இரண்டாம் நிலை தரவுகள் என்பன மீள்ளாய்வுக்குட்படுத்தப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் காத்தான்குடிப் பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையாளர்கள் காணப்படுவதுடன் அதற்கு ஏற்றாற் போல் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்களும் நடந்தவண்ணம் உள்ளது. அந்த அடிப்படையில் அதனை கையாள்வதற்கு பொருத்தமான முறையாக இஸ்லாமிய விழுமியங்களோடு செயற்படும் இஸ்லாமிய உளவளத்துணையினைப் பயன்படுத்தும் போது விரைவானதும், நிரந்தரமானதுமான தீர்வினை பெற முடியும்.