Abstract:
இணையம் மற்றும் சமூக வலைதளங்களின் தழுவலானது அனைத்துலகச் சமூகத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் பயன்பாடுகள் அதிகரித்தலானது நவீன மாற்றங்களின் புதியதொரு பரிணாமங்களாகிவிட்டன. அதிலும் கொவிட் - 19 இடர்காலத்தில் மனிதனின் அனைத்துச் செயற்பாடுகளும் இணையவழிக்கு மாற்றமடைந்திருக்கின்றன. இந்நிலையில் நிகழ்நிலை மூலமான கல்விச் செயற்பாடுகளானது பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் உலகையே தனது உள்ளங்கையில் இயக்கி வரும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. நிகழ்நிலைக் கல்வியுடன் சமூக வலைத்தளங்கள் பாவனையானது ஒன்றித்துள்ளது. அந்தவகையில் சமூக வலைதளங்களின் பாவனையானது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் பல நன்மையான விளைவுகளை ஏற்படுத்துவதோடு அநேகமான பாதகங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. எனவே பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சமூக வலைதளப் பாவனையின் நிலை மற்றும் அதன் சாதக, பாதகங்களைக் கண்டறியும் நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீட இரண்டாம் வருட மாணவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வானது அளவுசார் விபரிப்பு ஆய்வு முறையியலைப் பயன்படுத்துவதோடு முதல் நிலைத்தரவுளைப் பெறுவதற்காக வினாக்கொத்து தயாரிக்கப்பட்டு (GOOGLE FORM) ஊடாக வழங்கப்பட்டன. இவ்வினாக்கொத்தானது குறித்த பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களில் எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட நூறு பேரிடம் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்தோடு இரண்டாம் நிலைத் தரவுகளாக ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தளத் தகவல்கள் என்பன பயன்படுத்தப்பட்டன. பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள் MS EXCEL மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு பெறுபேறுகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாய்வில் இரண்டாம் வருட மாணவர்கள் மத்தியில் சமூக வலைத்தள பாவனை அதிகரித்த நிலையில் காணப்பட்டதுடன் அவர்கள் பெற்ற சாதகமான விளைவுகளாக பாடங்கள் சம்பந்தமான குறிப்புகள், ஆவணங்களைப் பெறுதல், கற்றல் மற்றும் உலகார்ந்த தகவல்களைப் பெறல் போன்றனவும் பாதகங்களாக நேரவிரயம், கற்றலில் ஆர்வமின்மை, உடல், உள, சமூக, பொருளாதார, தனிப்பட்ட ரீதியான பிரச்சினைகள் என்பனவும் முடிவுகளாக பெறப்பட்டுள்ளன.