Abstract:
வறுமை இன்றளவும் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகவும் பரவலான மற்றும் ஆபத்தான பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பல்துறை வழிகாட்டல்களையும் இஸ்லாம் வறுமையை ஒழிப்பதற்காக வேண்டி அதனுடைய பொருளாதார திட்டங்களை மிக சீரான அமைப்பில் முன்வைத்துள்ளது. அதில் மிக முக்கியமான அம்சமாக காணப்படக்கூடிய ஸகாத் வறுமை ஒழிப்புக்காக வழங்கக்கூடிய பங்களிப்பினை மீளாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், பண்பு ரீதியிலமைந்த இவ்வாய்வானது முன்னைய இலக்கியங்களின் மீளாய்வை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்வாய்வுக்காக இஸ்லாத்தின் மூல ஆவணங்களான அல்குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வரலாற்றுப் புத்தகங்கள்,முன்னைய ஆய்வுகள், இணையக் கட்டுரைகள்,சஞ்சிகைகள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளின் மூலம் கிடைக்கப் பெறக்கூடிய வறுமை மற்றும் ஸகாத் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு அவைகள் ஆழமான முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு பெறுபேறுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மனிதன் இறைவன் கூறும் பாதையில் தனது செல்வத்தைச் செலவழிப்பதன் மூலமாக, கஞ்சத்தனம், குறுகிய மனம், கல்நெஞ்சம், இரக்கமின்மை, பேராசை இன்னும் இது போன்ற இழி குணங்களிலிருந்து மனிதன் பாதுகாக்கப்படுவதுடன் தாராளத் தன்மை, பிறருக்கு வழங்கக்கூடிய மனப்பான்மை போன்ற பல்வேறு நல்ல குணங்களை தன்னகத்தே கொண்டு துன்பங்களை நீக்கக் கூடிய வகையில் செயல்படக் கூடடியவனாக மாறுகின்றான். அதன் அடிப்படையில் இஸ்லாமிய வரலாற்றில் ஸகாத் முறைமை இஸ்லாமிய ஆட்சியாளர்களினால் செயல்படுத்தப்பட்டு வந்த விதத்தின் ஊடாக இதனை கண்கூடாக கண்டு கொள்ள முடிகின்றது. அந்த வகையில் வறுமை ஒழிப்புக்காக ஸகாத் வழங்கக்கூடிய பங்களிப்பானது மிகவும் சிறப்பான வகையில் அமையப் பெற்றுள்ளது.