Abstract:
தமிழில் புனைகதைகள் குறித்த சிந்தனையும், ஆய்வும் இடம் பெற்ற வண்ணமே உள்ளன. இருபதாம் நூற்றாண்டில் புனைகதை இலக்கியம் வளர்ச்சியடைந்து புதிய பரிணாமம் அடைந்தது. ஐரோப்பியரின் வருகை காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலக் கல்வியும் அதன் பயனாக உருவான மத்தியதர வர்க்கமும் புனைகதை இலக்கியம் தோன்றுவதற்கு காரணமாயின. ஆங்கில இலக்கியத்தின் தொடர்பினால் அதே பின்னணியில் தமிழிழும் இலக்கியம் படைக்கலாயினர். மேலை நாட்டை போலவே தமிழ் நாட்டிலும் முதலில் நாவல் தோன்றி, அதன் பின்னரே சிறுகதைகள் தோற்றம் பெற்றன. 1930 களில் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள் சிறுகதையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பினை வழங்கின. 1960 ஆம் ஆண்டு சிறுகதைகளை எடுத்து நோக்கினால் அவை சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலைப்பட்ட விடயங்களை பேசியதுடன் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையிலே எழுத்தாளர்கள் சிறுகதைகளில் ஈடுபாடு காட்டி வந்தனர். 1980ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சமாதானத்தை வலியுறுத்துவதான சிறுகதைகள் தோற்றம் பெற 1980 இற்கு பின் பெண்களின் பிரச்சினைகள் கதைகளினூடாக வெளிப்பட ஆரம்பித்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பின் புதிய பரம்பரையினர் சிறுகதைகளைப் படைக்கலாயினர். முஸ்லிம் பெண் எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட சிறுகதைகள் அவர்களின் வகிபாகத்தை விளக்குவதில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவை பெண் படைப்பாளிகளினால் படைக்கப்பட்ட இலக்கியம் என்பதனால் பெண்களுடன் தொடர்புடைய விடயங்களே அதிகம் பேசப்பட்டன. இவர்களுடைய சிறுகதைகள் திருமணம், சமூக பொருளாதாரத்துடன் தொடர்புடைய விடயங்கள், சீதனப் பிரச்சினைகள், பெண்களோடு தொடர்புடைய விடயங்கள் என பலவற்றைப் பேசியுள்ளன. முஸ்லிம் பெண்களின் நடத்தைகள், முனைப்புகள், ஆளுமைகள் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன. பெண்கள் சார்ந்த பிரச்சினைகள், அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், அவலங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள் முதலானவற்றை வெளிப்படுத்துவதில் ஈழத்துச் சிறுகதைகள் சிறந்து விளங்குகின்றன. அந்தவகையில் இவற்றை வெளிப்படுத்துவதில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் வகிபாகம் யாது? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈழத்துத் தமிழ் சிறுகதை வளர்ச்சியில் முஸ்லிம் பெண் படைப்பாளிகளின் வகிபாகத்தினை ஆராய்தல், சிறுகதைகளின் உள்ளடக்கம் பற்றி ஆராய்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் சமூகவியல் அணுகுமுறை, விவரணவியல் அணுகுமுறை, மொழியியல் அணுகுமுறை போன்ற ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுக்கு முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவுகளாக பெண் படைப்பாளிகளின் கலந்துரையாடல்கள், படைப்பாளிகளுடனான நேர்காணல், பெண் படைப்பாளிகளின் குடும்பத்தினர், நண்பர்களுடனான நேர்காணல் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக படைப்பாளிகள் தொடர்பாக பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள், பெண் படைப்பாளிகள் குறித்து ஏனைய எழுத்தாளர்கள் எழுதி வெளியிட்ட கட்டுரைகள், நூல்கள், இணையப் பக்கங்கள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன.