Abstract:
தமிழ், சர்வ சமயங்கள் மற்றும் சமயம் சாராத இலக்கியங்களினால் செறிவுற்றது. எல்லாச் சமயத்தைச் சார்ந்த இலக்கியங்களும் தமிழில் தோற்றம் பெற்றுள்ளன. சங்க காலந்தொட்டு அறபு நாட்டவர் தமிழகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். 1950ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழறிஞர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் இரண்டினை மாத்திரமே அறிந்திருந்தனர். பிற்காலங்களில் ஏனைய இலக்கியங்கள் தோன்றியிருப்பது கண்டறியப்பட்டன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் பல புதுவகைச் சிற்றிலக்கியங்கள் தோன்றியதோடு மரபுத் வழியைப் பின்பற்றி பல இலக்கியங்களும் படைக்கப்பட்டன. அவ்வாறான இலக்கியங்களில் காப்பியங்கள் முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. தமிழில் தோன்றியுள்ள காப்பியங்கள் தனித்தன்மை வாய்ந்தனவாகும். எல்லா மொழிகளிலும் காப்பியங்கள் தோன்றியுள்ளன. இஸ்லாமியப் பின்ணனியில் தோன்றிய காப்பியங்கள் இஸ்லாமியக் காப்பியங்கள் எனப்படுகின்றன. அநேகமான இஸ்லாமியத் தமிழ் காப்பியங்கள் இஸ்லாமிய அடிப்படையிலேயே அமைந்துள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டதாக அமைவது பெருங்காப்பியங்களாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இந்நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டமைந்த காப்பியங்கள் தோன்றியுள்ளன. இஸ்லாமிய அடிப்படையில் முஸ்லிம் புலவர்களால் பாடப்பெற்ற தமிழ்க் காப்பியங்களுள் காலத்தால் மூத்தது கனகாபிஷேகமாலையாகும். கனகாபிஷேகமாலையில் அலி(ரழி), இமாம் ஹூஸைன் (ரழி) ஆகியோரின் வரலாறுகள் இணைச் சங்கிலியாக அமைவதைக் காணலாம். நபி பெருமானாரின் இறுதிக் காலக்கட்டத்திலிருந்து தொடங்கும் இக்காப்பியம் ரசூலின் பின்னர் வந்த கலீபாக்களின் வரலாறுகளை கூறுகிறது. இந்நூல் 1648 இல் படைக்கப்பட்டது. கனகாபிஷேகமாலை பாடுவதற்கு கனகவிராயருக்கு அடிப்படையாக அமைந்தது 'முக்கத்திலூசன்' எனும் நூலாகும். இஸ்லாமிய வரலாற்றைக் கூறுவதில் கனகாபிஷேகமாலையின் வகிபங்கு முக்கியமானது. ஆதாரபூர்வமான இஸ்லாமிய வரலாறுகள் மற்றும் வரலாற்றுக்கு மாற்றமான கருத்துக்களை கனகாபிஷேகமாலை குறிப்பிடுகின்றது. இஸ்லாமிய வரலாற்றைக் கூறுவதில் கனகாபிஷேகமாலை வகிபங்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமிய வரலாற்றைக் கூறுவதில் கனகாபிஷேகமாலையின் வகிபங்கினை ஆராய்தல், கனகாபிஷேகமாலை கூறும் வரலாற்றுக்கு முரணான விடயங்களை ஆராய்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஓர் பண்புசார் ஆய்வாகும். இவ்வாய்வில் சமூகவியல் அணுகுமுறை, விவரணவியல் அணுகுமுறை, மொழியியல் அணுகுமுறை போன்ற ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுக்கு முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குர்ஆன் மற்றும் ஹதீஸ் முதலியன முதலாம் நிலைத் தரவுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நூல் தொடர்பாக வெளிவந்த நூல்கள், கட்டுரைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் இணையப் பக்கங்கள் போன்றன இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.