Abstract:
உலகம் தோன்றியது முதல் இன்று வரையில் காலாகாலமாக பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களை சந்தித்துக்கொண்டுதான் வருகிறது. அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முழு உலகையும் உலுக்கிய பேரிடரான கொரோனா தொற்று இன்றுவரையும் பல அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது எமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை. நாடளாவிய ரீதியில் இதன் தாக்கம் உணரப்பட்டது தொடக்கம் இன்று வரையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்டதோடு மட்டுமல்லாது பொருளாதாரம், சுகாதாரம், உற்பத்தி, அரச சேவை, கல்வி, அபிவிருத்தி மற்றும் விவசாயம் என பல துறைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. சிறிய அளவிலான உற்பத்தி நிறுவனங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன. தங்களது தொழிலினை தொடர்ந்தும் கொண்டுநடாத்த முடியுமா என்ற அச்சம் அவர்களை மேலும் சோர்வடையச் செய்தது. அதிலும் விசேடமாக உற்பத்தி மூலப்பொருட்களுக்கு வெளிநாடுகளை நம்பியிருந்த நெசவுசார் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே மருதமுனை 03ஆம் பிரிவு நடுத்தர நெசவு உற்பத்தியாளர்கள் கொரோனா இடர்நிலையில் எதிர்கொண்ட சவால்களை இவ்வாய்வு ஆராய்கிறது. இவ்வாய்வானது பண்பு ரீதியான அளவீடுகளைக் கொண்ட ஆய்வாகும். இதில் முதலாம் நிலைத் தரவுகளும், இரண்டாம் நிலைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதானமாக ஒழுங்கமைக்கப்படாத நேர்காணல் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களாகக் கருதப்படும் நெசவுக் கைத்தொழில் முயற்சியாளர்களிடம் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்படுள்ளன. பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மருதமுனை 03 பிரதேசத்தில் கொரோனாத் தொற்றினால் பாதிப்புற்றிருக்கும் நெசவுக் கைத்தொழில் நிறுவனங்கள் அப்பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கும், அவற்றின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் சாத்தியமான பரிந்துரைகளையும் யுக்திகளையும் இவ்வாய்வு முன்வைக்கிறது.