Abstract:
ஒரு மனிதன் மனிதனாகப் பிறந்ததன் காரணமாக அவன் இயல்பாக அனுபவித்து வாழவேண்டிய இயற்கையான சுதந்திரங்களையும் உரித்துக்களையும் மனித உரிமைகள் என பொதுவாகக் கூறலாம். இத்தகைய மனித உரிமைகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியில் பல்வேறு பாதுகாப்புப் பொறிமுறைகள் உள்ளன. 1978 ஆம் ஆண்டு இரண்டம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமை தொடர்பாகக் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் உலகளாவிய ரீதியில் ஏற்பட் கொவிட்-19 தொற்று நோய் உலக பொருளாதாரத்தை எதிர்மறையாக பாதித்துள்ளது. இது இலங்கையிலும் பாரியளவில் தாக்கம் செலுத்தியுள்ளது. அத்தோடு கொவிட்-19 இற்கு முன்னரான முறையற்ற வரி நடவடிக்கை, ஈஸ்டர் தாக்குதல், கொவிட்-19 முடக்கல்கள் என்பன அந்நியச் செலாவணியைக் குறைத்துள்ளது. இவை இலங்கை மக்களுடைய சமூக, பொருளாதார, வாழ்வாதாரம் என்பனவற்றைப் பாதித்துள்ளது. அதாவது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எரிபொருட்களை பெரும்பொருட்டு நீண்ட வரிசையில் நிற்பதால் தமது வேலை நேரங்களை இழக்கின்றனர். இதனால் பொருளாதார உரிமை சவாலுக்குட்படுவதோடு அரச கொள்கை வழிகாட்டல் தத்துவத்தின் கீழ் விதி 27 (2) (ஈ) ஆனது பகிரங்க தனியாள் முயற்சி, தனியாள் பொருளாதார முயற்சியின் மூலம் நாடு முழுவதையும் விரைவாக அபிவிருத்தி செய்ய தவறியுள்ளது எனலாம். அத்தோடு அரச கொள்கை தத்துவத்தின் விதி-27 (9) கீழ் சமூக பொருளாதார சேம நலனையும் அரசு உறுதிப்படுத்த தவறியுள்ளதால் இலங்கையினது அத்தியவசிய மருந்து பற்றாக்குறை மற்றும் அத்தியவசிய பொருட்களுக்காக போராடி வரிசையில் நின்று உயிரிழப்புக்கள் ஏற்பட்டதோடு நாட்டை விட்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர் காலத்தில் இவ் அபாயம் அதிகரிக்கக் கூடிய நிலை உள்ளதால் சமூக உரிமை தொடர்ந்தும் பேராபத்தில் உள்ளது எனலாம். மேலும் கல்வி கலாசார உரிமையானது தொடர்ந்தும் பாதித்துள்ளது எனலாம். அத்தோடு அரசகொள்கைத் தத்துவத்தின் விதி 27 (7), (2)- (அ) கீழ் சமூக ஏற்றத்தாழ்வையும் சுரண்டலையும் ஒழிக்கத் தவறியுள்ளதோடு, சமூக பொருளாதார, அரசியல் விடயங்களில் நீதியை பின்பற்றத் தவறியுள்ளது. மேலும் இத்தகைய முறையற்ற நிர்வாக செயற்பாட்டினால் சுற்றுலாத்துறை, விவசாயம் பாதிக்கப்பட்டு மக்களது வாழ்வாதார உரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது. மேலும் இத்தகைய நிதி நெருக்கடியினால் அதிகரித்த அரச எதிர்ப்பைத் தெரிவிக்கும் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதோடு சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை அடிப்படை உரிமை அத்தியாயம் 03, விதி 14 (அ) இனை மீறுகிறது. அத்தோடு நிதி நெருக்கடி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டதோடு சுடப்பட்டு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது அடிப்படை உரிமை அத்தியாயம் 03, விதி 14 இனை மீறுகின்றது. அதாவது (அ)- பேச்சு, கருத்து வெளிப்படுத்தல் சுதந்திரம், (ஆ)- அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம், (இ)- ஒருங்கு சேருவதற்கான சுதந்திரம், (ஏ) இலங்கை முழுவதும் தடையின்றி பயணிக்கும் உரிமைகளை மீறுகின்றது எனலாம். இவ் ஆய்விற்குப் பண்பு ரீதியான தரவுப் பகுப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சிந்தனைகள், கருத்துக்கள், சொற்கள், பதங்கள், போன்றன பயன்படுத்தப்பட்டு இவ் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலாம் நிலை தரவான ஜனநாயக சோசலிச குடியரசு யாப்பில் இருந்தும் இரண்டாம் நிலைத் தரவுகளான நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள், பத்திரிக்கைகள் மற்றும் இணையத்தளங்கள் என்பவற்றில் இருந்து தரவுகள் பெறப்பட்டு தொகுத்தறிப் பகுப்பாய்வின் மூலம் முடிவுகள் பெறப்பட்டுள்ளது.