Abstract:
தற்சிறுமை என்பது ஓர் ஆன்மா தன்னளவில் தன்னைச் சிறுமை செய்யும் செயல்களாகும். அவ்வான்மா தனது எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை மனிதப்பண்பிலும் தாழ்ந்ததாக - இழிவானதாகக் காட்டிக் கொள்ளும் மனவுணர்வுச் செயற்பாங்கு இதுவாகும். இச்செயற்பாங்கின் குறிக்கோள்> ஆன்மா இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தல் - அர்ப்பணித்தலே. இவ்வுணர்வுகள் மற்றும் மனப்போக்குகளானவை அருளியல் நோக்கில் வெளிப்படுவன. பக்தி இலக்கியங்களில் உணர்வுகள் சார்ந்த எண்ணங்களையும் நடத்தையியல் சார்ந்த வெளிப்படுத்துகைகளையும் பலவாறு இனங்கண்டறியலாம். சைவபக்தி இலக்கிய மரபில் முதன்மை பெறுகின்ற சைவத்திருமுறைகளில் திருவாசகம்> திருக்கோவையார் என்பன மாணிக்கவாசகரது இலக்கியப் படைப்புகளாகும். நீத்தல் விண்ணப்பம் என்பது திருவாசகத்தின் ஒரு பதிகமாகும். இதனைப் பிரபஞ்ச வைராக்கியம் என்பர். ஒரு ஆத்மனின் பிரபஞ்ச விடுதலைக்கான வேண்டுதல் இப்பதிகத்தில் பிரதிபலிக்கிறது. இத்தகைய வேண்டுதலில் மாணிக்கவாசகரின் மனப்போக்கினை இனங்காணலாம். இப்பின்னணியே இந்த ஆய்வு நிகழ்த்தப்படுகின்றது. மாணிக்கவாசகரது பிரபஞ்ச பற்றறுத்தலுக்கான விண்ணப்பத்தில் தற்சிறுமை கொள்ளும் மனப்போக்கு வெளிப்பட்டு நிற்கின்றது. இத்தகைய மனவியல்பினையும் அவ்வுணர்வு எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதனையும் வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் பிரதான இலக்காகும். மாணிக்கவாசகரின் மூல நூல்களிலிருந்து தரவுகள் பெறப்பட்டு அவை உய்த்தறிவு முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தொகுத்தறிவு முறை மற்றும் விவரண ஆய்வு முறையியல்களின் அடிப்படையில் ஆய்வுசார் முடிவுகள் பெறப்பட்டிருக்கின்றன. ஆய்வுச் செல்நெறியின் தேவைக்கேற்ப உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையும் பயன்படுத்தப்படுகிறது. இறைவன் முன்னிலையில் வெளிப்படுகின்ற ஆத்மாவின் மனப்போக்குகளை பக்தி இலக்கியங்களில் கண்டறிவதற்கு இவ்வகை ஆய்வுகள் பயனுடையதாக அமையும் எனும் உளத்தூண்டுதலின் அடிப்படையில் இந்த ஆய்வு நிகழ்த்தப்படுகின்றது.