Abstract:
மனித குலத்தின் சமய> சமூக> அரசியல்> பொருளாதார> பண்பாட்டுப் பரப்புகளின் போக்கில் ஊடகங்கள் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றன. ஊடகங்கள் சமூகத்தில் பாரிய மாற்றங்களை செய்யக்கூடிய சக்தி படைத்தவை. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மதப்பிரசாரங்களை செய்ததில் இந்த ஊடகங்களுக்கு முக்கிய பங்குள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் மக்களின் வாழ்வோடு ஒன்றித்து அவர்களது பல தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. அந்தவகையில் இந்துக்களின் பண்பாட்டு வளர்ச்சியில் ஊடகங்கள் கணிசமான பங்களிப்பினை செய்கின்றது. இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் இந்துப் பண்பாடு முதன்மை பெற்று விளங்கும் இடங்களுள் ஒன்றாகும். இந்துக் கலாசாரத்தில் ஊறித் திழைத்த சமுதாய கட்டமைப்பு இங்கு காணப்படுகின்றது. இருப்பினும் நவீன கால பண்பாட்டு மாற்றம் இங்குள்ள இந்துசமயப் பாரம்பரியத்தை சீர்குழைப்பதில் பங்கு வகிக்கும் முக்கிய காரணியாகும். இதில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர் சமுதாயமாகும். இந்துக்களின் சிறப்புமிகு மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் விழுமியங்களையும் அலட்சியப்படுத்தி காலப்போக்கில் அவற்றை மறந்து போகின்றனர். எனவே இந்துப் பண்பாட்டின் சிறப்புகள் தொடர்ச்சியாக சமூகத்தில் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் மாறிக் கொண்டிருக்கும் பண்பாட்டியங்கியலில் இந்துசமயம் தனது தனித்துவத்தை இழக்க நேரிடும். இன்றைய சமுதாயத்தில் இந்துப் பண்பாட்டுச் சிறப்புகளை ஒவ்வொருவரினதும் மனதில் இருத்தும் பணியினைச் செய்ய ஊடகமே பொருத்தமான சாதனமாகும். பொதுவாக ஊடகங்கள் எனும் போது அச்சு ஊடகங்கள்> இலத்திரனியல் ஊடகங்கள் எனும் இரு வகையான ஊடகங்கள் வகைப்படுத்தி ஆராயப்படுகின்றன. ஆய்வின் விரிவஞ்சி அச்சு ஊடகங்களை மையப்படுத்தியதாக இவ்வாய்வு அமைகின்றது. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சமய பண்பாட்டு விழுமியங்களை எடுத்துக்காட்டும் அச்சு ஊடகங்களை அடையாளம் காணுதலும்> தற்காலத்தில் இந்து சமய பண்பாட்டு நெறிமுறைகளை வளர்ப்பதில் ஊடகங்களின் முக்கியத்துவத்தினை விபரித்தலும் இவ் ஆய்வின் நோக்கங்களாக அமைகின்றன. இதற்கு விபரண ஆய்வு> வரலாற்றியல் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பத்தொன்பதாம்> இருபதாம் நூற்றாண்டுகளில் அச்சு ஊடகங்கள் பொதுவாக இந்து சமயத்திற்கு எதிரான ஆயுதங்களாகவே பயன்பட்டன. காலப் போக்கில் இந்துக்களும் ஊடகங்களை தமது சமய> பண்பாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டனர். தற்காலச் சூழலில் வணிக நோக்கோடு இந்த ஊடகங்கள் செயற்படுவதால் சமய> பண்பாட்டு வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு கணிசமானளவு குறைந்துள்ளது. எனினும் யாழ்ப்பாண மக்களின் கலை> பண்பாடு> இந்துக் கல்வி வளர்ச்சி> இந்து சமய வளர்ச்சிக்கான பெண்களின் பங்களிப்பு> இந்து சமயத்திற்குத் தொண்டாற்றிய பெரியார்கள் போன்ற கருத்துக்களை ஊடகங்கள் காத்திரமாக வெளிப்படுத்திக் கொண்டும் வருகின்றன.