Abstract:
மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதற்கு ஒரு பதிலாக இறைவனால் படைக்கப்பட்ட மிக மேலான படைப்பு என்ற கருத்து உண்டு. இவ்வாறு படைக்கப்பட்ட மனிதன் உலக வாழ்வில் பல்வகையான இன்னல்கள், சவால்கள், கஷ்டங்கள், அடக்குமுறைகள், தீமைகள் போன்றவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளான். பெரும்பாலான மனிதர்கள் இதற்கு முகம் கொடுத்து வாழத் தெரியாது நிம்மதியின்றி வாழ்வை இழக்கின்றனர். இத்தகைய மனிதர்களை வளப்படுத்தி வாழச்செய்யும் ஒரு சேவையாக உளவளத்துணை காணப்படுகின்றது. உளவளத்துணை என்பது நாளாந்த வாழ்வில் மனிதன் முகம்கொடுக்கும் எதிர்பாராத பிரச்சினைகளை ஏற்று சாதாரண நிலைக்கு கொண்டு வரும் செயற்பாடாகும். இதற்கமைய ஒரு தனியாள் முகம்கொடுக்கும் மனவெழுச்சிப் பிரச்சினைகள் பல. அதில் ஒன்றுதான் இழவிரக்கம். பிறப்பும் இறப்பும் உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்றாகும் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமாக இருப்பினும் நம்மை விட்டு பிரிந்து செல்லும் அன்புக்குரிய உறவுகளின் இறப்பினை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அந்தவகையில் இழவிரக்கம் எனப்படுவது பெரும்பாலும் இழப்பினை தொடர்ந்து அதிலும் அன்புக்குரியவரின் மரணத்தை தொடர்ந்து ஏற்படும் தாக்கமாகும். மரணத்துயரில் உள்ளவரின் பிரச்சினையை இனங்கண்டு அதற்கான மரணச்சடங்கு கிரிகைகளை பின்பற்றுவதன் மூலம் அத்துயரிற்கான தீர்வினைப் பெற முடியும். இவ்வாறான துக்கம் அனுஷ்டிப்பு அல்லது மரணசடங்கு என்பதற்கமைய, இஸ்லாமிய மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் 'இத்தா' என்ற சடங்கு முறையை பின்பற்றுகின்றனர். இத்தா எனப்படுவது ஒரு பெண் கணவனின் மரணம் அல்லது பிரிவை தொடர்ந்து மறுமணம் செய்யாமல் சில காலங்கள் காத்திருப்பதாகும். இந்த 'இத்தா' முறைமையானது உளவளத்துணையில் இழவிரக்கத்தோடு தொடர்புபட்டிருப்பதை காணமுடிகிறது. அந்தவகையில் 'இத்தா' முறையானது இழவிரக்கத்தின் உளவளத்துணை செயற்பாட்டோடு எத்தகைய தொடர்பை கொண்டிருக்கிறது. இவை இரண்டும் ஒரே பயனை தருகிறதா? என்பது ஆய்வு பிரச்சினையாக அமைந்தது. இவ்விரு கருத்தாக்கங்களும் சடங்கு முறைகளும் அடிப்படையில் ஒத்த தன்மையை அல்லது ஒத்த பயனையே தருகிறது என்ற அதன் ஒரே தன்மையான நோக்கங்கள் இதுவரை ஆராயப்படவில்லை எனும் ஆய்வு இடைவெளியை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இழவிரகத்திற்காக மேற்கொள்ளப்படும் சடங்குகள் மற்றும் கிரிகைகள் மனிதர்களை சுயமாக ஆற்றுப்படுத்துகிறது. அதேபோல இத்தா சடங்கு முறையும் பெண்களை சுயமாக ஆற்றுப்படுத்துகிறது என்பதன் தொடர்பை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வில் ஒப்பீட்டு ஆய்வு, விபரண ஆய்வு பகுப்பாய்வு முறை என்பன பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் இவ் இத்தா முறைமை, தனியாளை ஆற்றுப்படுத்துகிறது என்பதை ஆழமாகப் பதியச் செய்கின்றது.