Abstract:
பிரித்தானியர் ஆட்சியின் இறுதிப்பகுதியில் இலங்கையானது, தென்னாசியா மற்றும்
தென்கிழக்காசியாவில் முற்போக்கான இன நல்லிணக்கம் மற்றும் அரசியல் ஸ்திரமான
நாடாக காணப்பட்டது. துரதிஷ்டவசமாக இலங்கையில் சுதேசியரிடம் அதிகாரம் கைமாற்றம்
அடைந்ததை தொடர்ந்து புதிய யாப்பு உருவாக்க செயல்முறைகள் இன நல்லிணக்கத்தை
கேள்விக்கு உட்படுத்துபவையாகவும், ஜனநாயகத்திற்கு சவால் விடுபவையாகவும்
அமைந்துள்ளன. குறிப்பாக 1978ஆம் ஆண்டு யாப்பானது பௌத்த மதத்துக்கு முன்னுரிமை,
தனிமனிதனிடம் அதிகாரக் குவிப்பு, சட்ட ஆட்சியை கோட்பாட்டின் அடிப்படையில்
கேள்விக்கு உட்படுத்துதல், விகிதாசார பிரதிநிதித்துவத்தின் பலவீனங்கள் போன்றவற்றினால்
இலங்கையில் அடிப்படை ஜனநாயக நடைமுறைகளை கேள்விக்கு உட்படுத்தியது. எவ்வாறு
இருப்பினும் 1978ஆம் ஆண்டு யாப்பானது இதுவரைக்கும் 20 அரசியல் சீர்திருத்தங்களை
சந்தித்த போதிலும் இலங்கையில் வாழும் சகல தரப்பினரையும் திருப்திப்படுத்துவதாக
அமையவில்லை. அந்த வகையில் இவ்ஆய்வானது அரசியல் யாப்பில் உள்ள அடிப்படை
அம்சங்களான அடிப்படை உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகள், நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமை, விகிதாசார பிரதிநிதித்துவ முறை, சட்ட ஆட்சி, நீதித்துறை
கட்டமைப்பு, ஒம்புட்ஸ்மன் போன்றவற்றை ஆழமாக ஆராய்ந்து அவற்றின் பலம்,
பலவீனங்களை வெளிக்கொணர்வதுடன் புதிய அரசியல் யாப்பிற்கான தேவையை
தர்க்கரீதியாக முன்வைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாய்வானது அரசியல்
சமூகவியல் அணுகுமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதல் நிலைத்தரவுகளாக
அவதானிப்புக்கள், நேர்காணல்கள், வினாக்கொத்து, கலந்துரையாடல்கள் போன்றன
கொள்ளப்படுகின்றன. இரண்டாம் நிலைத் தரவுகளாக 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு
பற்றிய பல்வேறுபட்ட நூல்கள், ஆய்வு சஞ்சிகைகள், தேசிய பத்திரிகைகள் போன்றன
பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்ஆய்வின் ஊடாக இலங்கையில் காலத்திற்கு காலம்
இடம்பெறும் அரசியல் நெருக்கடிகளுக்கும், படிப்படியாக தோல்வியடையும்
பொருளாதாரத்திற்கும் யாப்பு எவ்வாறு அடித்தளமிட்டுள்ளது என கண்டறிந்து, யாப்பின்
பலவீனங்களை களைந்து நிலையான அரசியல் அபிவிருத்திக்கும் அரசியல்
ஸ்திரத்தன்மைக்கும் புதிய அரசியல் யாப்பின் தேவைப்பாட்டை சிபார்சு செய்கிறது.