Abstract:
பாடசாலைகளை வகைப்படுத்தலும் மாணவர்களைத் தடம் பிரித்தலும் கல்விச் சமநீதி
பற்றிய இன்றைய ஆய்வுகள் எதிர்கொள்ளும் நிரந்தரப் பிரச்சினையாகும்.
இலங்கையானது அதன் நீண்டகால இலவசக் கல்விச் சாதனைகள், சீர்திருத்தங்கள்
மத்தியிலும் கட்டமைப்பு ரீதியான குடும்ப சமமின்மையின் பாதிப்புகளை எதிர்
கொள்கின்றது. இச்சூழமைவில் இவ்வாய்வானது யாழ்ப்பாணகல்விக்கோட்டத்தின்
வகை 2 பாடசாலைகளின் நிலவரங்களை பகுப்பாய்வு செய்வதன் வழி சமநீதியற்ற
காரணிகளை இனங்காணல் மற்றும் மதிப்பிடலை நோக்காகக் கொண்டுள்ளது. இதன்
வழி இம்மாணவர்களின் கல்வி அடைவு இடை வெளிகளை அடையாளப்
படுத்துவதன் மூலம் அடைவுக்கும் பெற்றோர் கல்வி / தொழில், வீட்டின் பௌதீக
வசதிகள், குடும்ப இடைவினை, மாணவரின் சுயமதிப்பு மற்றும் பாடசாலைத் தெரிவு
ஆகியவற்றுக்கும் இடையிலான உறவு பற்றிய ஆய்வு வினாக்களுக்கான
பொருண்மைகளை கண்டுகொள்ளுதல் இலக்காகும். குறுக்கு வெட்டு கள ஆய்வாக
இவ்வாய்வானது திட்டமிடப்பட்டது. ஆய்வின் குடித்தொகையாக வகை 2 பாடசாலை
களிலிருந்தும் அதே கோட்டத்தின் உயர வகைப் பாடசாலைகளிலிருந்தும்
மாணவர்கள் பொருத்தமான மாதிரி எடுத்தல் முறைவழி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சுயமாக நிர்வகிக்கப்படும் வினாக்கொத்து மூலம் தரவு சேகரிக்கப்பட்டு SPSS
துணையுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டது. மாணவர் குடும்பங்களின் மனிதவள
மூலதனம் மற்றும் பௌதீக வசதிகளை மையமாகக்கொண்டு சமநீதிச் சுட்டி
கட்டமைக்கப்பட்டது. வகை 2 பாடசாலை மாணவருக்கும் உயர் வகைப் பாடசாலை
மாணவருக்குமிடையில் குறிப்பிடத்தக்க புள்ளிவிபரவியல் ரீதியான வேறுபாட்டினை
முடிவுகள் வெளிப்டுத்துகின்றன. ஆய்வில் பதிலளித்த வகை 2 மாணவரில்
கணிசமான பெரும்பான்மையினரின் பெற்றோர் குறைந்த கல்விப் பின்னணியைக்
கொண்டவராகவும் தற்காலிக தொழில் செய்பவராகவும் இருந்தமையையும் முடிவுகள்
தெளிவாக்காட்டுகின்றன. இவர்கள் வீடுகளில் அடிப்படைத் தேவையான கற்பதற்கான
தனி இடம் அல்லது தனி அறை போதுமானளவு இல்லை. கல்வி சார்ந்த வீட்டு உதவி
கிடைப்பதில்லை. அங்கத்தினரிடையே மிகத் தாழ்ந்தளவு இடைவினை
ஈடுபாடேயுள்ளது. இச் சூழமைவில் கட்டமைக்கப்பட்ட சமநீதிச் சுட்டிகள்,
ஒருங்கிணைந்த முறையிலான முக்கிய சமநீதி மூலோபாயத் திட்டமிடல், அதன்
முழுமையான செயற்பாடு பற்றிய கண்காணிப்பு என்பவற்றிலும் குறிப்பாக பின்
தங்கிய மாணவர்களைக் கருத்திற் கொண்ட சமூக பொருளாதார பாடசாலை
ஒருங்கிணைப்பு (SES) போன்ற இடையீட்டுக் கொள்கை நடைமுறைகளிலும் பயனான
கருவிகளாக விளங்கும் என இவ்வாய்வு எதிர்பார்க்கின்றது.