Abstract:
பெண்களின் கல்வி ஒரு காத்திரமான அறிவுத் தளத்தில் சமுதாயம் வளர உதவுகிறது.
ஒரு குடும்பம் நல்ல முன்மாதிரியாக அமைய அந்தக் குடும்பத்தைக் கொண்டு நடத்தும்
பெண்ணின் அறிவு உதவி செய்கிறது. இன்றைய கால கட்டத்தில் பெண்களின் படிப்பு
பல விதத்திலும் வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்தவகையில், பெண்களை வலுவூட்டுவதில்
அவர்களின் உயர்கல்வியின் செல்வாக்கினை கண்டறிவது இவ்வாய்வின் நோக்கமாக
உள்ளது. இவ்வாய்வுக் கட்டுரையானது பண்புசார் முறையில் விபரிப்பு ஆய்வு
முறையியலை பயன்படுத்துகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்
கணிப்பீடுகள, ஆய்வுகள், நூல்கள், கட்டுரைகள், இணைய ஆக்கங்கள், இணையத்
தளங்கள் மூலம் பெறப்பட்ட இரண்டாம் நிலைத்தரவுகளை மையப்படுத்தியதாக
இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது. இவ்வாய்வானது இலங்கையிலுள்ள உயர்
கல்வியை மையப்படுத்தியதாக மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் உயர்கல்வியை
தொடர்வதில் பால்நிலை ரீதியாக பெண்களே அதிகளவில் காணப்படுகின்றனர். இதனால்
பெண்களின் வலுவூட்டலுக்கு இவ்விடயம் பெரிதும் பக்கபலமாக அமைந்திருப்பதை காண
முடியும். குறிப்பாக, சமூக செயற்பாடுகளில் ஆண்களின் ஈடுபாடு கணிசமாக
காணப்படுகின்ற அதேவேளை கல்வி ரீதியான பெண்களின் இந்த முன்னேற்றமானது
இலங்கையில் தொழில் துறைகளில் பெண்களின் ஈடுபாட்டிற்கு இட்டுச்சென்றுள்ளது.
இதனால், பெண்கள் குறித்த சமூகப் பார்வை பால்நிலை ரீதியாக இலங்கையில்
மாற்றமடைந்து வருகின்றது. அவ்வாறே, பட்டப்பின் படிப்புக்களை மேற்கொள்வதிலும்
ஆண்களை விட பெண்கள் அதிக தொகையில் காணப்படுவது மேலும் மேலும்
அவர்களின் வலுவூட்டலை மேம்படுத்துகின்றது ஆகியன இவ்வாய்வின் பிரதான
கண்டறிதல்களாக காணப்படுகின்றன.