Abstract:
இஸ்லாமிய சட்டத்துறை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த அறிஞர்களுள் இமாம்
அவ்ஸாஈ அவர்களும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றார். தனது ஆரம்ப காலம்
முதலே இஸ்லாமிய அறிவுத்தேடலில் ஈடுபட்ட அவர்கள் பல பகுதிகளையும் சேர்ந்த
ஆசிரியர்களிடமிருந்து அறிவைப் பெற்றதோடு அதன் விளைவாக தன்னை வளர்த்துக்
கொண்டது மாத்திரமன்றி அதனைக் கொண்டு பல மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்.
இவ்வாய்வானது இமாம் அவ்ஸாஈ அவர்கள் இஸ்லாமிய சட்டத்துறைக்கு ஆற்றிய
பங்களிப்புக்கள் தொடர்பாக விரிவாக ஆராய்தலை நோக்காகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்புரீதியாக அமைந்துள்ள இவ்வாய்வானது இரண்டாம்
நிலைத்தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வினை மேற்கொள்
வதற்காக இமாம் அவ்ஸாஈ அவர்கள் இஸ்லாமிய சட்டத்துறைக்கு செய்த சேவைகள்
தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் நூட்கள் போன்றவை
மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு முடிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வில் இமாம்
அவ்ஸாஈ அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு, அவருடைய அறிவுத்தேடல்,
இஸ்லாமிய சட்டத்துறை இஸ்லாமிய சர்வதேச சட்டத்துறை என்பனவற்றுக் க்காற்றிய
பங்களிப்புக்கள் போன்ற பிரதானமான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. ஏனைய பிரதான
நான்கு இமாம்களை விட இவருடைய பங்களிப்புக்கள் குறைவாகக் காணப்பட்டாலும் கூட
இஸ்லாமிய சட்டத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பானது இன்றும் சிறப்புப் பெற்று
விளங்குகின்றது என்பதனை ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.