Abstract:
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான
உள்நாட்டு மோதலானது 2009இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. யுத்தத்திற்குப்
பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் சமாதானம் மற்றும் அபிவிருத்தி என்பன
ஏற்படும் என முஸ்லிம் சமூகத்தினராலும் பிற சமூகங்களாலும் எதிர்பார்க்கப்பட்டாலும்
கூட நாட்டில் தோன்றிய புதிய சிங்கள பௌத்த தீவிரவாத குழுக்களால் குறிப்பாக
முஸ்லிம் சமூகத்தினர் குறிவைத்து தாக்கப்பட்டமையானது யுத்தத்திற்குப் பின்னரான
நல்லிணக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது எனலாம். அதாவது முஸ்லிம்களுக்கு
எதிரான தாக்குதல்கள் வெறுப்பு பேச்சுக்கள் போன்றன சிங்கள பௌத்த தீவிரவா
திகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து முஸ்லிம் சமூகத்தில்
குறிவைத்துள்ளனர் எனும் வகையில் சிந்திக்க வழிவிட்டது. மேலும் 2009 ஆம்
ஆண்டிலிருந்து முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும்
வன்முறைகள் என்பன அரசின் ஆதரவுடன் இடம் பெறுகின்றது என்பதும் தெளிவா
கின்றது. அவ்வாறு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்குப் பின் முஸ்லிம்களின் மீதான
அதிகரித்த தடுப்புக்காவல் மற்றும் கண்காணிப்பு என்பவற்றுடன் சர்வதேச ரீதியில் பரவி
வருகின்ற COVID19 தொற்றின் விளைவால் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய நகரங்கள்
மூடப்படுதல் மற்றும் முஸ்லிம்களின் இறந்த உடல்கள் கட்டாய தகனத்திற்கு
உட்படுத்தப்படல் (இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது) போன்ற நிகழ்வுகள் அரசின்
அனுசரணையுடன் இடம் பெற்றமை யாவும் முஸ்லிம்கள் மீதான அரசாங்கத்தின் எதிர்
தன்மையை காட்டுகின்றது. COVID19 தொற்றானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில்
ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆராய்வதாக இவ்வாய்வு இடம்பெற்றுள்ளது. இவ்
ஆய்வானது இரண்டாம் நிலை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்
பட்டுள்ளது. இவ் ஆய்வானது இலங்கையின் ஒரு புதிய மோதலை தவிர்க்க ஒரு
முழுமையான அணுகுமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் வாதிக்கின்றது.