Abstract:
முதுராஜவல சதுப்பு நிலப் பகுதியானது அதிகம் கண்டற் தாவரப் பல்வகைமையைக
கொண்டு காணப்படுகின்றது. இலங்கையில் கண்டற் தாவரப் பல்வகைமை செறிவாகக்
காணப்படும் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்ட முதல் 12 பிரதேசங்களில்
முத்துராஜவலப் பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வானது முத்துராஜவல சதுப்பு
நிலச் சூழற் தொகுதியின் கண்டற் சூழற் பல்வகைமையை இனங்காண்பதோடு இப்
பிரதேசத்தின் கண்டற் சூழற்தொகுதிப் பல்வகைமை எதிர்கொண்டுள்ள
அச்சுறுத்தல்களுக்கான காரணங்களைப் பகுப்பாய்வு செய்வதனையும் நோக்காகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் தரவு சேகரிப்பிற்காக இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்பு
முறைகளே பயன்படுத்தப்பட்டன. நூல்கள், ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், சர்வதேச
ஆய்வுச் சஞ்சிகைகள், மாநாடுகளின் அறிக்கைகள் போன்றவற்றின் மூலமாக இரண்டாம்
நிலைத் தரவுகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில்
முத்துராஜவலப் பகுதியில் 16 கண்டற் தாவர இனங்கள் காணப்படுகின்றன. இச் சூழற்
தொகுதியில் ரைசோபோரசியா எனும் கண்டல் இனக் குடும்பமே அதிகம்
காணப்படுகின்றது. விலங்குகளுள் 40 வகையான மீன்கள், 14 வகையான ஈருடகவாழிகள்,
31 ஊர்வன இனங்கள், 102 வகையான பறவைகள் மற்றும் 22 வகையான பாலூட்டிகள்
இங்கு காணப்படுகின்றன. 16 கண்டற் தாவர இனங்களுள் 06 இனங்கள் ரைசோபோரசியா
இனக் குடும்பத்தைச் சேர்ந்ததாகவே காணப்படுகின்றது. அவற்றில் இலங்கைத் தீவில்
அருகி வரும் நிலையிலுள்ள 03 கண்டற் தாவர இனங்கள் உள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது. ஆவணப்படுத்தப்பட்ட மொத்த முள்ளந்தண்டுளி உயிரினங்களில் 17
இனங்கள் இடப்பெயர்ச்சி கொண்டவையாகவும் 26 இனங்கள் அச்சுறுத்தல்களை
எதிர்நோக்கியிருப்பதாகவும் கருதப்படுகின்றன. அதேபோல முள்ளந்தண்டிலி
விலங்கினங்களுள் 48 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான ஒடோனேட்ஸ்கள்
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும் அண்மைக்காலமாக முத்துராஜவல கண்டற்
சூழற் தொகுதியானது பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக
முத்துராஜவலப் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட அனைத்து இனக் கண்டற்
தாவரங்களும் 2017 ஆம் ஆண்டின் ஐ.யூ.சி.என் செந்தரவுப் பட்டியலில்
உள்ளடக்கப்பட்டுள்ளது. ஈருடகவாழி இனங்களுள் 5 இனங்கள் தேசியளவில் ஆபத்தை
எதிர்நோக்கியுள்ள இனங்களாகும். மீனினங்களிலும் தேசிய அளவில் 05 இனங்கள்
ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. உள்ளுர் மக்களின் அதிகபடியான சுரண்டல், விவசாயம்,
உப்புக்கைத்தொழில், நகராக்கம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அதிகரிப்பு,
நீர்ப்பாசனத்திற்காக நன்னீரைத் திருப்புதல் போன்ற மனித செயற்பாடுகளே
இவ்வச்சுறுத்தல்களுக்கான பிரதான காரணங்களாகும். மேலும் இறால், மீன் வளர்ப்பிற்காக
கண்டற் சூழற் தொகுதியைப் பயன்படுத்துவது கண்டற் சூழல் வாழ் உயிரினங்கள்
அழிவடைவதில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய மனித செயற்பாடாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.