Abstract:
நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளையும் கலை மரபுகளையும் இலக்கியங்களையும்
அறிந்து கொள்ளும் இயலே “நாட்டுப்புறவியல்” ஆகும். இங்கு ”நாட்டுப்புறம்‟ என்பது
கல்வியறிவில்லாத கிராமியப் பகுதிகளைக் குறிக்கும். இவர்கள் கிராமத்தான், பாமரன்,
நாட்டுப்புறத்தான், ஊர்மகன் எனப்பலவாறு அழைக்கப்படுகின்றனர். இவை யாவும்
கிராமத்தில் வாழும் மக்களையே குறிக்கும். நாட்டுப்புற மக்களால் பெரிதும்
பின்பற்றப்படும் சமயம் ”நாட்டுப்புறச் சமயம்‟ எனப்பெயர் பெறுகின்றது. இதில்
வழிபடப்படும் தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்கள் என அழைக்கப்படுகின்றன.
பெரும்பான்மையாக இம்மக்களின் மரபு வழிவந்த குலமுன்னோர்களை அவரவர் தமது
வழிபடு தெய்வங்களாகக் கொண்டுள்ளனர். தமக்கும் தமது சமூகத்திற்கும் நன்மை
செய்து இறந்துபட்ட முன்னோர்களை அவ்வக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தெய்வங்களாகக்
கருதி வழிபட்டு வந்துள்ளனர். நாட்டுபுறத் தெய்வங்கள் வழிபாடுகளின் அடிப்படையில்
குடும்பத்தெய்வம், குலதெய்வம், ஊர்ப்பொதுத்தெய்வம் என மூன்று வகையாக
அமைகின்றன. நாட்டுப்புறவழிபாடு சங்ககாலம் முதலாக இருந்து வரும் நெறியாகும்.
சமூகத்தின் பண்பாடு, அறிவியல், தொழிநுட்பம் போன்ற துறைகளின் வளர்ச்சியில்
நாட்டுப்புறவழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, என்பதை எடுத்துக் கூறுவதே
இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ்வாய்வில் வரலாற்றியல், சமூகவியல் மற்றும்
ஒப்பீட்டு முறையியல் சார்ந்த ஆய்வு முறையியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.