Abstract:
இக்கட்டுரையானது, இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் உள்ளூராட்சி அரசாங்க மறுசீரமைப்பு தொடர்பாக எவ்வாறான கொள்கைச் சீர்திருத்த முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. மற்றும் அவற்றின் அமுலாக்க நிலை என்ன என்பன குறித்து இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பகுப்பாய்வு செய்கின்றது. இதற்காக, அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைச் சீர்திருத்த முன்மொழிவுகள் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் முன்னைய ஆய்வுகளில் அடையாளப்படுத்தப்பட்ட உள்ளூர் சுய அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மீள ஆராயப்பட்டுள்ளன. அந்தவகையில், இவ்வாய்வின் முடிவுகள் பிரதானமாக இரண்டு வகையான விடயங்களை அடையாளப்படுத்துகின்றன: ஒன்று முன்மொழிவுகளில் உள்ள பலவீனங்கள், மற்றையது அவற்றை அமுல்படுத்துவதில் தாக்கம் செலுத்திய காரணிகள். முன்மொழிவுகளில் உள்ள பலவீனங்களில் பரிந்துரைக்கப்பட்ட சுயாட்சியின் அளவு, தற்துணிவு அதிகாரம், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் உள்ளூராட்சிக்கும் ஏனைய உயர் மட்டங்களுக்கும் இடையிலான தொடர்பு என்பனவற்றில் காணப்படுகின்ற பிரச்சினைகள் உள்ளடங்குகின்றன. மற்றையது, கொள்கை சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் தாக்கம் செலுத்திய வெளிப்புறக் காரணிகளாகும். இலங்கையின் மத்தியமயப் படுத்தப்பட்ட ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, உள்ளூராட்சி அதிகாரசபைகளை அரசாங்கத்தின் மூன்றாவது
மட்டமாக அங்கீகரிக்காமை, தமிழர்களினால் முன்வைப்பட்ட சுயாட்சிக் கோரிக்கையின்
எழிச்சியினால் உள்ளூராட்சி அரசாங்க சுயாட்சி பின்தள்ளப்பட்டமை, உள்ளூராட்சி கொள் கை சீர்திருத்த முயற்சிகளனைத்தும் மத்தியரசினாலேயே மேற்கொள்ளப்பட்டமை உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பங்குபற்றுதல் மிகக் குறைவாகவே காணப்பட்டமை, மாகாண சபைகளின் உருவாக்கம் மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளின் இயலாமைகள் போன்றன உள்ளடங்குகின்றன. எனவே, இவ்வாறான காரணிகளினால் உள்ளூராட்சி அரசாங்கம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்கள் அமுலாக்கப்படாததுடன், அதன் மூலமாக அடையப்படக் கூடிய உள்ளூர் சுய-அரசாங்கம் குறித்த முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளமையினை இவ்வாய்வு வெளிக்கொணர்ந்துள்ளது. மேலும், இவ் ஆய்வின் முடிவுகள் ஏலவே மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளிலும் மற்றும் அறிக்கைகளிலும் தொடர்ச்சியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், இனிவரும் உளளூராட்சி அரசாங்கக் கொள்கைச் சீர்திருத்த முயற்சிகளுக்கும் அவை தொடர்பான ஆய்வுகளுக்கும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.