Abstract:
மட்டக்களப்புத் தமிழகம் பல்லினப் பண்பாட்டையும், பல்லின மக்களின் வாழ்க்கை
முறைகளையும் கொண்ட பிரதேசமாகும். இந்துப்பண்பாட்டு மரபின் தனித்துவத்திற்கு
இம்மாவட்டமெங்கும் நிறைந்துள்ள சிறியளவும், பெரியளவுமாகிய கோயில்களே சான்று
பகர்கின்றன. பண்பாட்டு வேர்கள் ஆழமாகப் புதைந்து போயிருக்கும் இப்பிரதேசத்தின் இந்து வழிபாட்டம்சங்களை பல்வேறு கட்டமைப்பில் வகைப்படுத்த முடியும். அவற்றில் ஒன்றாக குலக்குறி வழிபாடு காணப்படுகின்றது. குலக்குறியியம் மனித வாழ்க்கை முறையோடு காலங்காலமாகப் பரிணாமம் அடைந்து வரக்கூடிய ஒரு அடையாளம் அல்லது குறியீடு சார்ந்த வடிவமாகும். குலக்குறி என்பது 'டோட்டம்' (Totem) எனவும் குலக்குறியியம் என்பது 'டோட்டமிசம் (Totemism) எனவும் அழைக்கப்படுகின்றன. இதில் விலங்கையோ பறவையையோ ஒரு பொருளையோ தங்களது குலக்குழு முழுமைக்கும் வழிகாட்டியாக,வணக்கத்திற்குரியதாக, மூதாதையர்களாகக் காண்பர். மட்டக்களப்பு மாவட்டத்தில் குலக்குறி சார்ந்த வழிபாடுகளையும் தெய்வங்களையும் அடையாளங் காணல், அவற்றிலுள்ள குலக்குறி வழிபாட்டிற்கான பண்புகளை விபரித்தல், அவற்றின் இன்றைய நிலைமைகள் பற்றி விளக்குதல் போன்றன இவ்வாய்வின் நோக்கங்களாகக் காணப்படுகின்றன. மட்டக்களப்பில் தனித்துமான வழிபாடாக விளங்கும் ஆகமம் சாரா வழிபாட்டின் ஒரு அங்கமாக குலக்குறி வழிபாடு காணப்படுகின்றது. இருப்பினும் குலக்குறி வழிபாட்டின் தன்மைகளைத் தழுவியே ஆகமம் சாரா வழிபாடுகள் இங்கு நடைபெறுகின்றது எனும் புரிதல் இப்பிரதேச மக்களிடம் காணப்படுகின்றனவா? என்பது ஆய்வுப்பிரச்சினையாக உள்ளது. குலக்குறி வழிபாட்டின் தனித்துவமான இயல்புகளையும் சிறப்புக்களையும் மட்டக்களப்பு மாவட்ட ஆகமம் சாரா வழிபாடுகளில் ஒன்றான ஆண் தெய்வ வழிபாடுகள் குலக்ககுறி வழிபாட்டின் மரபினை பேணி நிற்கின்றன எனும் கருதுகோளினை முன்வைத்து இவ்வாய்வு மேற்கொள ;ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் புராதன குலக்குறி வழிபாட்டு நெறிகளில் குமார தெய்வம், வதனமார், வைரவர் போன்ற தெய்வங்களுக்கான சடங்குகள் முக்கியம் பெறுகின்றன. இவ்வகையில் மட்டக்களப்பு மாவட்ட ஆகமம்சாரா வழிபாட்டின் தன்மைகளைக் கொண்ட குலக்குறி வழிபாட்டு நெறிகள் இப்பிரதேச மக்களின் வாழ்வில் பாரியளவில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. குறிப்பாக ஆண் தெய்வ வழிபாட்டில் குலக்குறியத்தின் தன்மைகளை அதிகளவில் காணலாம்.