Abstract:
மனித வாழ்வியலை வழிநடாத்துவதில் சமயங்களது வகிபாகம் தவிர்க்க முடியாத
ஒன்றாக உள்ளது. உலகின் பல பாகங்களிலும் மனிதர்கள் சமய வழிகாட்டல்களை
பின்பற்றத் தொடங்கியமையும் நாகரீக வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையவையாகும். இந்த வழிகாட்டல்களில் ஒன்று இயற்கையில் ஒரு
அங்கமாக, தங்களில் இருந்து வேறுபட்டவையாக இருக்கும் விலங்குகளை
எவ்வகையில் கையாழ்வது என்பது பற்றியதாக உள்ளது. புராதன காலத்தில் இருந்து
பின்பற்றப்பட்டுவரும் இந்த போதனைகள் மனித ஆழ்மனதில் பதிந்து சமகாலத்திலும்
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவில் தாக்கம்
செலுத்துபவையாக அமைந்துள்ளன. சமயங்கள் அவை தோற்றம்பெற்ற காலம், இடம்
என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட போதனைகளைக்
கொண்டுள்ளன என்ற அடிப்படையில் விலங்குகள் நோக்கப்படும் விதமும்
மாறுபட்டதாகவே அமைந்துள்ளன. விலங்குகளது நலன்கள் மற்றும் உரிமைகள்
தொடர்பான சிந்தனைகளும் செயற்பாடுகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்ற
இந்த காலப்பகுதியில் ஆப்ரகாமிய சமயங்களான யூதாயிசம், கிறிஸ்தவம், இஸ்லாம்
ஆகியவற்றில் இவ்விடயங்கள் தொடர்பில் எவ்வகையான வழிகாட்டல்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்ந்து வெளிப்படுத்துவதனை இந்த ஆய்வு
நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஊடாக சமகால விலங்குநலன்சார்
செயற்பாட்டாளர்கள் சமயங்களது கற்பிதங்களை தங்களுடைய முன்னெடுப்புக்களுக்கு
சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
பண்புசார்ந்ததாக இரண்டாம்நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு
முன்னாய்வாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் மக்களது
வாழ்க்கைமுறைகளும் பண்பாடுகளும், கலாசாரங்களும் மாறுபட்ட வகையில்
வடிவமைக்கப்படுவதற்கு பின்பற்றப்படுகின்ற சமயங்களும் காரணமாகவுள்ளன. இந்த
நிலையில் மக்கள் தங்களது அன்றாட செயற்பாடுகளிலும், அழகுணர்ச்சியிலும்,
கௌரவத்தின் அடையாளமாகவும், உணவுக்காகவும், விஞ்ஞான ஆய்வுகளுக்காகவும்,
விலங்குகளை பயன்படுத்துகின்ற விதங்களில் மாறுபாடுகள் காணப்படுவதற்கு சமய
வழிகாட்டல்கள் எவ்வகையில் தாக்கம் செலுத்துபவையாக அமைந்துள்ளன? இந்த
வழிகாட்டல்கள் ஊடாக இலக்காகக் கொள்ளப்படுவது மனிதர்களது நன்மையா
அல்லது விலங்குகளது நன்மையா? சமகால விலங்குநலன்சார் செயற்பாடுகளுக்கு
எத்தகைய வலுப்படுத்தல்களை சமய போதனைகள் ஊடாக வழங்க முடியும்? என்பன
இவ்வாய்வின் பிரதான வினாக்களாக அமைந்துள்ளன. கருணை மனப்பாங்கு
மனிதர்கள் அல்லாத விலங்குகள் தொடர்பிலும் விஸ்தரிக்கப்படுவது அவற்றின்
உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதற்கு இன்றியமையாத ஒன்றாக
இருப்பது கண்டறியப்பட்ட பிரதான விடயமாக அமைந்துள்ளது.